நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட மதிப்பெண் பட்டியலில் குறைவான மதிப்பெண்கள் இடம்பெற்றிருந்தது குறித்து, வழக்கு தொடர்ந்த மாணவிக்கு அசல் விடைத்தாளை காண்பிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்ற மாணவி தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் ஜூலை 31-ம் தேதி வெளியிடபட்டது. அதில் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்பட்ட நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, தனது விடைத்தாள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். இதனால், எனது அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, தேசிய தேர்வு முகமை தரப்பில், மனுதாரர் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு வருகை தந்தால் விடைத்தாளை சரிபார்ப்பதற்காக காண்பிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையில் விடைத்தாளை காண்பிப்பதற்கான தேதியை, 10 நாட்களில் நிர்ணயித்து மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார். அந்த தேதியில் நொய்டா வரும் மாணவிக்கு அசல் விடைத்தாளை தேசிய தேர்வு முகமை காண்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.