முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுபற்றி அரசியல் கட்சிகளின்தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை ஓராண்டு முடிவதற்கு உள்ளாகவே முனைந்து நின்று நிறைவேற்றிய, ஓய்வு அறியா உழைப்பாளியாம், நம் முதல்வரின் செயல் திறனை நாடும், ஏடும், நல்லவர்களும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் பாராட்டிப் புகழ்மாலை சூட்டி இருப்பது, திராவிட இயக்கத்துக்கு பெருமை சேர்க்கிறது. இந்த சாதனை சரிதம் தொடரவும், அனைத்து துறைகளிலும் திராவிட இயக்கக் கொள்கைகள் நிறைவேறிடவும் மின்னல் வேகத்தில் முனைப்புடன் செயல்பட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் அரசுக்கு, மதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: திமுகவின் ஓராண்டு கால ஆட்சி அவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்வதைப் போல சாதனையல்ல. தமிழக மக்களுக்கு தினம் தினம் சோதனையாகவே அமைந்திருக்கிறது. திமுக தனதுதேர்தல் அறிக்கையில் கொடுத்த முக்கியமானவாக்குறுதிகள் பலவற்றைகாற்றோடு பறக்கவிட்டுவிட்டார்கள். மக்களுக்கு பயன்தரக்கூடியதாக இருந்த அம்மாபெயரிலான, ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் அரசு மூடுவிழா நடத்தி வருகிறது.

திமுக எதற்காக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என பயந்தோமோ, அதெல்லாம் இப்போது நடக்கிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்: ஓராண்டை நிறைவுசெய்கிறது திமுக அரசு. தமிழகத்தின் வளர்ச்சியும், சமூக நீதியும் ஒரே நிலையில் சமமாக கொண்டு செல்லப்படுவதோடு, கடந்த ஓராண்டு ஆட்சியில் மாநில அரசின் நிதிநிலையை கையாள்வது, முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவற்றில் திமுக அரசின் செயல்பாடுகள் போற்றத்தக்கது.

எதிர்பார்த்திராத அளவுக்கு மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதோடு, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதைவிட தமிழகத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுகள்.

கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிஉலக மக்களால் பேசப்படுகிறது என்றால் முதல்வர் உழைப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

துறை வாரியாக தொடர்ந்து ஆய்வு கூட்டங்களை நடத்தி, வீழ்ந்துகிடந்த நிர்வாகத்தை தூக்கி நிறுத்தி இருப்பதற்கு எங்களின் பாராட்டுகள். அனைவருக்குமான அரசு என்று தொடங்கி1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கிபயணத்தை தொடங்கி இருக்கும் தங்களுடைய முன்னெடுப்பு வெற்றி பெற வேண்டும். இந்தியாவின் சிறந்த முதல்வர் என்ற பாராட்டைவிட சிறந்த மாநிலம் தமிழகம் என்ற தங்களுடைய ஆசை நிறைவேற துணை நிற்போம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.