மதுரை: மதுரை-நத்தம் புதிய நான்குவழிச் சாலையில் கடம்பவனம் அருகே தேசிய நெடுஞ்சாலைத் துறை புதிதாக சுங்கச்சாவடி அமைத்துள்ளது. இதற்கான சுங்கக் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், சுங்கச்சாவடி வழியே ஒருமுறை செல்லும் கார்களுக்கு ரூ.180 என்றும், 24 மணி நேரத்துக்குள் திரும்பி வரும் வாகனங்களுக்கு ரூ.270 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகு ரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினி பேருந்துகளுக்கு ரூ.290, 24 மணி நேரத்துக்குள் திரும்பி வந்தால் ரூ.435 என்றும், பேருந்து அல்லது டிரக்குகளுக்கு ரூ.605, 24 மணி நேரத்துக்குள் திரும்பி வந்தால் ரூ.905 என்றும், 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ரூ.660, 24 மணி நேரத்துக்குள் திரும்பி வந்தால் ரூ.990, பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றிச் செல்லும் வாகனம் அல்லது பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.950, 24 மணி நேரத்துக்குள் திரும்பி வந்தால் ரூ.1,425 என்றும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவு கொண்ட வாகனம் (7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்டவை) ஒருமுறை செல்வதற்கு ரூ.1,155, 24 மணி நேரத்துக்குள் திரும்பி வந்தால் ரூ.1,730 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக உபயோகம் அல்லது உள்ளூர் வாகனங்களுக்கு (20 கி.மீ. தொலைவுக்குள்) மாதாந்திர பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இந்த கட்டணம் நேற்று (ஜூன் 26) காலை 8 மணி முதல் நடைமுறைக்கு வருவதாகவும், தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஆனால், நேற்று திட்டமிட்டபடி இந்த சுங்கச்சாவடி திறக்கப்படவில்லை. இந்த கட்டண நிர்ணயத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வழக்கத்துக்கு மாறாக, மிக அதிகமாக சுங்கக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தியடைந் துள்ளனர்.