எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அவர்களுடன் அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

மேலும், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து எம்ஜிஆர் வழி நடப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

முன்னதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அவரவர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.