மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்.11-ம் தேதி அரசு சார்பில் ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என்றுமுதல்வர் ஸ்டாலின் அறிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் 10-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை கோட்டை கொத்தளத்தில் நான், ஆக.15-ம் தேதி தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றும்போது, ‘இது மகாகவி பாரதியார் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு’ என்று குறிப்பிட்டேன். அவர் வரகவியா, மகாகவியா, தேசியகவியா என்று விவாதம் நடந்த காலத்தில், 1947-ம் ஆண்டே பாரதியாரை ‘மக்கள் கவி’ என்று எழுதவும், பேசவும் தொடங்கியவர் முன்னாள் முதல்வர் அண்ணா. ஒருபக்கம் நில பிரபுத்துவம், இன்னொரு பக்கம் சனாதனம், இந்த இரண்டுக்கும் இடையில் இருந்து புதுயுகத்தை படைக்க நினைத்தவர் பாரதி என்று அண்ணா எழுதினார்.

அதனால்தான் திமுக அரசுஅமைந்து, கருணாநிதி முதல்வரானபோது, எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி நினைவு இல்லம்ஆக்கினார். அப்போதைய அமைச்சர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் கடந்த 1973 மே 12-ம் தேதி நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக, பாரதியார் நினைவைப் போற்றும் 14 அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

பாரதியார் நினைவு நாளான செப்.11-ம் தேதி ஆண்டுதோறும் அரசு சார்பில் ‘மகாகவி நாளாக’கடைபிடிக்கப்படும். இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி, ஒரு மாணவர், மாணவிக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் ‘பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும்.

பாரதியாரின் தேர்வு செய்யப்பட்ட பாடல்கள், கட்டுரைகளை தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 37 லட்சம் பேருக்கு ரூ.10 லட்சம் செலவில் வழங்கப்படும்.

பாரதியாரின் வாழ்க்கை, படைப்புகள் குறித்து குறிப்பிடத்தக்க ஆய்வுகள் மேற்கொண்ட, மறைந்த பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் நினைவாகஅவர்களது குடும்பத்தினருக்கும், மூத்த ஆய்வாளர் சீனி.விசுவநாதனுக்கும், பேராசிரியர் ய.மணிகண்டனுக்கும் தலா ரூ.3லட்சம், விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்.

பாரதி உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப் பொருட்களை பூம்புகார் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்கப்படும்.

பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடி தொகுக்கப்பட்டு, வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம், சித்திரக்கதை நூலும்,பாரதியாரின் சிறந்த 100 பாடல்களை தேர்வு செய்து தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் ஒரு நூலும் வெளியிடப்படும். பாரதியாரின் படைப்புகள், அவரைப் பற்றிய முக்கிய ஆய்வு நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.

பாரதியாரின் நூல்கள், அவரைப்பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து எட்டயபுரம், திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்கள், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் அமையும் கலைஞர் நினைவு நூலகத்தில் வைக்க, ‘பாரதியியல்’ என்ற தனி பிரிவு ஏற்படுத்தப்படும்.

உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்தப்படும்.

கரோனா தொற்று முழுமையாக நீங்கிய பிறகு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘திரையில் பாரதி’ என்ற இசைக்கச்சேரி நடத்தப்படும். திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியின் பாடல்கள் மட்டுமே இதில் இடம்பெறும்.

பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டுக்கு சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் செய்திதுறை சார்பில் வாரம்தோறும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.

பாரதியார் படைப்புகளை குறும்படம், நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி, நவீன ஊடகங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளை பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும், வரைந்தும் பரப்பப்படும்.

பெண் கல்வி, பெண்களிடம் துணிச்சலை வலியுறுத்தியவர் பாரதி. ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்த உள்ள மகளிர்சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவுக்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ என்று பெயர் சூட்டப்படும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.