காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் நிலையில் அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் செவ்வாய்கிழமை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தன. புதன்கிழமை நடக்கும் விழாவில், காங்கிரஸ் கட்சி தலைமை தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் மிஸ்த்ரி மல்லிகார்ஜூன கார்கேவிடம் தேர்தல் வெற்றி சான்றிதழை முறையாக ஒப்படைத்தார். இதில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள்.

கட்சி தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பாக கார்கே, டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதி, முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, முன்னாள் துணை பிரதமர் ஜக்ஜீவன் ராம் ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்த்தினார். முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.

கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், மக்களவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவர், மாநிலங்களவையின் எதிர்கட்சிகளின் தலைவராக பதவி வகித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே தொடர் தேர்தல் தோல்விகளுக்கு பின்னர் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தலைவர் பொறுப்புக்கு வர விரும்பாத நிலையில், கட்சியின் நெருக்கடியான சூழ்நிலையில் 80 வயதான மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர் என இரண்டு மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் கார்கேவின் முன்னாள், அதற்கான முன்னோட்டமாக அடுத்த சில வாரங்களில் நடைபெற இருக்கும் இமாச்சலபிரதேசம், குஜராத் மாநிலத்தேர்தல்கள் உள்ளன. நவ.12ம் தேதி ஒரே கட்டமாக இமாச்சலப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குஜராத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு தனது சொந்த மாநிலமான கர்நாடகா உட்பட 9 மாநிலங்களுக்கு நடைபெற உள்ள தேர்தல்களும் காங்கிரஸ் கட்சியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் மிகப்பெரிய பொறுப்பும் கார்கேவின் முன் அணிவகுத்து நிற்கிறது.

உதய்பூர் சீர்திருத்தங்களை கட்சியில் அமல்படுத்துவதே எனது முக்கிய நோக்கம் எனக் கூறியுள்ள கார்கேவுக்கு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியின் மாண்பை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கும் அதேவேளையில் தான் ஒரு சுதந்திரமாக மூடிவெடுக்கும் தலைவர் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

கடந்த 1998ல் கட்சித் தலைவராக இருந்த சீதாராம் கேசரிக்கு பின்னர் காந்தி குடும்பத்தைச் சேராத காங்கிரஸ் கட்சின் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மல்லிகார்ஜூன கார்கே, நிஜலிங்கப்பாவிற்கு பின்னர் கர்நாடகாவிலிருந்து தலைமைக்கு தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது தலைவர், ஜக்ஜீவன் ராமிற்கு பின்னர் காங்கிரஸ் தலைவராகும் தலித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான உள்கட்சி தேர்தல் அக். 17ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை அக்.19ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு ராஜீவ் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரும் தேர்தலில் போட்டியிட்டனர். இதில், மல்லிகார்ஜூன கார்கே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.