பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எச்1என்1 ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று அமைச்சர் அன்பில் மகேஸ் காய்ச்சல் அறிகுறி காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக நேற்று (27ம் தேதி) பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உரிய சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்கி வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் எச்1என்1 ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (28ம் தேதி) அவர் பேசுகையில், “அமைச்சர் அன்பில் மகேஸுக்கு எச்1என்1 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சை முடிந்து நாளை அவர் வீடு திரும்புவார். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை” என்று தெரிவித்தார்.