இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. இந்தக் கிளைகள் தனித்தனி வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் டெல்லி, மும்பை, அகமதாபாத் என 17 வட்டங்கள் இருக்கின்றன. இதில் சென்னை வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராக பணி புரிபவர் ராதாகிருஷ்ணா. சென்னை வட்டம் என்பது தமிழ்நாட்டையும் பாண்டிச்சேரியையும் உள்ளடக்கியது. மொத்தம் 1,200-க்கு மேற்பட்ட வங்கிக் கிளைகள் சென்னை வட்டத்தின் கீழ் உள்ளன.

இந்த வங்கிகள் அனைத்தும் ராதாகிருஷ்ணாவின் தலைமையின் கீழ்தான் செயல்படுகின்றன. சென்னை வட்டத்தில் எஸ்பிஐயின் செயல்பாடுகள் குறித்தும், அதன் கடன் நிலவரம் குறித்தும், அதன் திட்டங்கள் குறித்தும் ராதாகிருஷ்ணாவிடம் உரையாடியதிலிருந்து…

ஏன் வீட்டுக் கடன் பிரிவுக்கு மட்டும் விதிவிலக்கு?

“தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சியில் பயணிக்கிறது. இதனால் வீட்டுக் கடன் பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். சென்னை வட்டத்தை எடுத்துக்கொண்டால் வீட்டுக் கடன் பிரிவில் எஸ்பிஐ 28 சதவீதம் சந்தையைக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு வரையில் ரூ.50 ஆயிரம் கோடி வீட்டுக் கடன் வழங்கியிருக்கிறோம். இந்த ஆண்டு ரூ.60 ஆயிரம் கோடியை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை எட்ட, வரும் ஜூன் 3 தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கவிருக்கும் வீடு, மனை கண்காட்சியில் கலந்துகொள்ளும் கட்டுமான நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.”

இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவம் என்ன?

“கட்டுமான நிறுவனங்களையும் பொதுமக்களையும் இணைக்கும் பாலமாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், பொதுமக்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு மிக எளிதாக வீட்டுக் கடன் பெறலாம். கண்காட்சி அரங்கிலேயே வீட்டுக் கடனுக்கான ஒப்புதல் அவர்களுக்கு வழங்கப்படும். ஐந்து நாட்களுக்குள் கடன் வழங்கப்பட்டுவிடும்.

எஸ்பிஐயின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.65 சதவீதம்தான். மிகக் குறைவான வட்டிவிகிதம் இது. சிறப்பு சலுகைகளை இந்தக் கண்காட்சியில் வழங்க இருக்கிறோம். உதாரணமாக, ஒப்புதல் பெற்றத் திட்டங்களுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் கிடையாது. செயல்பாட்டுக் கட்டணத்தில்கூட 50 சதவீத தள்ளுபடி உண்டு. கட்டுமான நிறுவனங்களுக்கும் பல சலுகைகளுடன் கூடிய கடன் வழங்கவுள்ளோம்.”

ரியல் எஸ்டேட் தொடர்பான கடன் வழங்கலில் எஸ்பிஐயின் வரம்பு என்ன?

“நாங்கள் முதன்மையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டுமான நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். ரூ.3 கோடி முதல் ரூ.50 கோடி என்பதாக கடன் வரம்பு வைத்துள்ளோம். சென்னையில் ரூ.100 கோடி வரையில் கடன் வழங்கப்படும்.”

எந்தப் பிரிவில் அதிக அளவில் கடன் வழங்கப்படுகிறது?

“இந்திய அளவில் எடுத்துக்கொண்டால் தொழிற்துறைக்கு. சென்னை வட்ட அளவில் ரியல் எஸ்டேட் துறைக்கு வழங்கப்படுகிறது.”

எந்தப் பிரிவில் வாராக் கடன் அதிகம் உள்ளது?

“இந்திய அளவிலும் சரி, சென்னை வட்ட அளவிலும் சரி தொழிற்துறையிலும் வேளாண் துறையிலும் வாராக் கடன் அதிகம் உள்ளது. இத்துறைகள் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிக்கக்கூடியது என்பதால் இவற்றில் வாராக் கடன் அதிகமாக இருப்பது இயல்பானதுதான்.”