விடுபட்ட 9 மாவட்டங்களில் நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில்முழு வெற்றி பெற திமுக மாவட்டச் செயலாளர்கள் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்காத செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 15-ம்தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில் இந்த 9 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது, கட்சி சார்பற்ற தேர்தல் என்றாலும் கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் திமுகவினரையும், திமுக ஆதரவாளர்களையும் அதிக அளவில் வெற்றி பெறச் செய்வது, பிரச்சார வியூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியயூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி என்று 9 கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டியுள்ளது குறித்தும்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‘‘அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே பாதிக்கும் அதிகமான இடங்களில் வென்றோம். இப்போது திமுக ஆட்சியில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான வெற்றியை பெற வேண்டும். எனவே, வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என்று அனைத்திலும் முழு கவனம் செலுத்தவேண்டும்’’ என்று அறிவுறுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தெரிவித்தார்.
மேலும், ‘‘உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. எனவே, பெண் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். திமுகவினர் தங்களது மனைவி, மகள், மருமகன், மாமியார், உறவினர்களை தேர்வு செய்யாமல் வெற்றி வாய்ப்புள்ள பெண் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் விளக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும், திமுகவினர் மட்டுமல்ல, கூட்டணி கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்’’ என்றும் ஸ்டாலின் கூறியதாக அவர் தெரிவித்தார்.