2021-ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதுகலை பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான நீட் தேர்வை என்பிஇ எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்தியா முழுவதும் 255 நகரங்களில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடைந்த நிலையில், முதுகலை நீட் தேர்வு தள்ளிப் போனது. இதைத் தொடர்ந்து மருத்துவ இளங்கலைப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் 260-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று காலை 9 மணிக்கு நீட் முதுகலைத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் 800-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
இந்தத் தேர்வை எழுத 1,75, 063 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளோடு தேர்வு நடைபெற்று வருகிறது.
முன்னதாக கரோனா காரணமாக முதுகலை நீட் தேர்வு மையங்களை மாணவர்கள் மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் செப்.9-ம் தேதி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.