புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த ஜூன் 2 ஆம் தேதி சோனியா காந்திக்கு முதன்முதலில் கரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது அவர் ஆரம்பத்தில் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். சில தினங்களுக்குப் பின்னர் ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு இன்று கரோனா தொற்று உறுதியானது. அவர் அரசு விதிகளின்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்று பதிவிட்டிருந்தார்.

அண்மையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் மீண்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இவர்கள் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா, கட்சியின் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எனப் பலரும் கரோனா தொற்றால் அண்மையில் பாதிக்கப்பட்டனர்.

ராகுல் காந்திக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.