தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவானது ஆளுநருக்கும், அண்ணாமலைக்கும் மட்டும் புரியாமல் போனது விந்தையாக உள்ளது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, தவாக, கொமதேக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் விலக்குக்காக நிறைவேற்றிய மசோதா ஒட்டுமொத்த மக்களுக்கும் புரிந்துள்ளது. ஆளுநருக்கும், அண்ணாமலைக்கும் மட்டும் புரியாமல் போனது விந்தையாக உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே பிஹார் உள்ளிட்ட மாநிலங்களின் விருப்பமாக உள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்ததைப் பற்றி தற்போது பேச வேண்டாம் என்று எண்ணுகிறேன். பாஜகவையும் அதிமுகவையும் மக்கள் எதிர்காலத்தில் புறக்கணிக்க வாய்ப்பிருக்கிறது” என்றார்.