சென்னை சென்ட்ரல்-ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இடையே அமைக்கப்பட்டு வந்த புதிய சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு கீழே சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இரு வழித்தட மெட்ரோ ரயில்களும் இணையும் முக்கிய மையமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.

இதன் அருகே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவை இருப்பதால், இந்தப் பகுதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துடன் மற்ற பகுதிகளை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே, பூங்கா நகர்-சென்னை சென்ட்ரல் மின்சார ரயில் நிலையத்துக்கு எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, எதிரே உள்ள ராஜீவ்காந்த் அரசு மருத்துனை மற்றும் அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையம், பூங்கா ரயில் நிலையத்துக்குச் செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, “சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, எதிரெ உள்ள அரசு மருத்துமனைக்குச் செல்லும் சாலையில், எப்போதும் மக்கள் கூட்டம் உள்ளது.

எனவே, மக்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் பெருமளவு முடிந்துள்ள நிலையில், எஸ்கலேட்டர்கள் இணைக்கும் பணிகளும் ஓரிரு நாளில் முடிந்துவிடும். அதன்பிறகு சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறந்துவைக்கப்படும்” என்றனர்.