தமிழக அரசின் 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட்டில் குடிமராமத்துதிட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படாததால் அத்திட்டம் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீர்நிலைகளை தூர்வாரி, பலப்படுத்தி பராமரிப்பதற்காக கடந்தஆட்சியில் குடிமராமத்து திட்டம்கொண்டு வரப்பட்டது. குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டும் பணி ரூ.100 கோடி ஊக்க நிதியுடன் 2016-17-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் வழங்கு வாய்க்கால்கள், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் நீர்நிலைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்திட்டத்துக்கு 2021-22 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால் இத்திட்டம் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து நீர்வளத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மொத்தம் ஒப்புதல் வழங்கப்பட்ட ரூ.1,417.72 கோடி மதிப்பிலான 6,211 குடிமராமத்துப் பணிகளில் 5,855 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 265 பணிகள் நடந்து வருகின்றன. ஒரு பணி முற்றிலுமாக கைவிடப்பட்டது. 79 பணிகள் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட உள்ளன. ஏற்கெனவே தொடங்கப்பட்டு முடிக்கப்படாத குடிமராமத்துப் பணிகள், தற்போது முடிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்துக்கு 2021-22 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. இத்திட்டம் கைவிடப்படுகிறதா, இல்லையா என்பது கொள்கை முடிவு என்பதால் அரசுதான் அதைஅறிவிக்க வேண்டும். அதேநேரத்தில், வழக்கமாக பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்படும் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு மத்திய அரசின் நிதி கோரப்பட்டு, குறிப்பிட்ட திட்டங்களுக்கு நிதியும் வரப்பெற்றுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியது:

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் சிட்டி யூனியன் வங்கிநிதியுதவியுடன் சுமார் 750 ஏக்கர்பரப்பளவு கொண்ட 7 ஏரிகள், 3 குளங்கள், 62 கி.மீ. நீளத்துக்கு பாசன ஆறு, வடிகால்வாய்கள் தூர்வாரி, பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏரிகளின் கரைகளில் ஆயிரக்கணக்கான மரங்களும் வளர்க்கப்படுகின்றன. இதனால் 300 கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. சுமார் 6 ஆயிரம்ஏக்கருக்கான நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அரசிடம் இருந்து நிதி பெறாமல், அந்தந்த பகுதி விவசாயிகள் பங்களிப்புடன் இப்பணிகள் நடந்துள்ளன. எந்த முறைகேடும் செய்யாமல், ஒருபிடி மண்ணைக்கூட விற்காமல் ஏரிப் பாசன விவசாயிகள் குழுக்கள் மூலம் இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளோம். 120 அடி வரை கீழே சென்ற நிலத்தடி நீர்மட்டம், இப்போது 20 அடிவரை உயர்ந்திருக்கிறது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 250 ஏக்கர்நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதனால், இத்திட்டம் விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதம்.

இத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால், அதை சரிசெய்து, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி மேலும் சிறப்பாக இத்திட்டம் தொடர அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.