தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த காலங்களில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து ஆணைகளையும் செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அதைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு, கட்டணங்களை குறைக்கும்படி ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களை அழைத்து வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இந்த விஷயத்தில் மக்களின் குரலை ஒலிக்க வேண்டிய போக்குவரத்து துறை அமைச்சர், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் பிரதிநிதியைப் போல பேசி வருவது பெரும் ஏமாற்றமளிக்கிறது.

தீபாவளி, பூஜை விடுமுறை காலத்திற்கான ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதனடிப்படையில் ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய போக்குவரத்து துறை அமைச்சர்,”ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சேவை செய்யவில்லை. அரசு பேருந்து கட்டணத்தை, தனியார் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிடுவது தவறான ஒரு கண்ணோட்டம். தனியார் பேருந்து கட்டணம் அதிகம் என்று தெரிந்துதான் மக்கள் பயணம் செய்கிறார்கள். அவர்கள் புகாரும் செய்யவில்லை. தனியார் பேருந்துகளின் கட்டணம் ஏழை மக்களை பாதிக்கவில்லை” என்று கூறியுள்ளார். அமைச்சரிடமிருந்து இப்படி ஒரு பதிலை எவரும் எதிர்பார்க்கவில்லை.

அமைச்சருடனான பேச்சுக்குப் பிறகும் கூட ஆம்னி பேருந்து கட்டணம் இதுவரை குறைக்கப்படவில்லை. பூஜை விடுமுறைக்காக நாளை மறுநாள் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு அதிகபட்சமாக ரூ.3,870 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான அக்டோபர் ஒன்றாம் தேதி அதிகபட்சமாக ரூ.3,999 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு சாதாரண நாட்களில் ஆம்னி பேருந்துகளில் ரூ.550 மற்றும் ரூ.1000 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

வழக்கமாக வசூலிக்கப்படுவதை விட 3 மடங்குக்கும் கூடுதலாக ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. இதை மறைமுகமாகக் கூட அவை வசூலிக்கவில்லை. ஆன்லைனில் வெளிப்படையாக அறிவித்து வசூலிக்கின்றன. அக்டோபர் 20-ஆம் தேதி சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு விமானக் கட்டணமே ரூ.3,523 மட்டும் தான் எனும் போது அதை விட அதிகமாக ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் இந்த கட்டணக் கொள்ளையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. தமிழக அரசை மதிக்காமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கடந்த காலங்களில் பல முறை இத்தகைய கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது சிறிய அளவில் அபராதம் விதித்ததைத் தவிர போக்குவரத்துத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆம்னி பேருந்து கட்டணங்களை முறைப்படுத்த தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. இதை சென்னை உயர்நீதிமன்றம் பல முறை உறுதி செய்திருக்கிறது. அதற்கு பிறகும் தமிழக அரசால் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுவதும், அவர்கள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களிடமிருந்து புகார் வராத அளவுக்கு கட்டணங்களை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று போக்குவரத்து அமைச்சர் ஆலோசனை வழங்குவதும் நியாயமல்ல.

“ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அவற்றின் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிப்பது சட்ட விரோதமானது” என்று 2016-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், “மோட்டார் வாகன சட்டத்தின் 67-ஆவது பிரிவின்படி ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு தான் நிர்ணயிக்க வேண்டும். கட்டணத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் குழுவை அமைக்க வேண்டும்’’ என்றும் ஆணையிட்டது. ஆனால், அத்தீர்ப்பின் மீது 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதற்கு முன்பாக ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பான வழக்கில் 22.06.2016 அன்று தீர்ப்பளித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு,”ஆம்னி பேருந்துகள் அரசால் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம். ஒவ்வொரு ஆம்னி பேருந்திலும் பயணிகளின் பார்வையில் படும் வகையில் பயணக் கட்டண விவரங்கள் எழுதி வைக்கப்பட வேண்டும். அதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 044-24749001, 044-26744445 ஆகிய எண்களில் அரசிடம் புகார் செய்யலாம். அதன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆணையிட்டது. ஆனால், அதுவும் செயல்படுத்தப்படவில்லை.

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசுக்கு மோட்டார் வாகன சட்டமும், சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வளவு அதிகாரங்களை வழங்கியிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி மக்கள் நலனைக் காப்பது தான் தமிழக அரசின் கடமையாகும். அதற்கு மாறாக, கட்டணக் குறைப்பு தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் அரசு கோரிக்கை வைக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த காலங்களில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து ஆணைகளையும் செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.