ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.50 கோடியில் டிஜிட்டல் ஸ்மார்ட் மீட்டர் வாங்கியதில் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த திமுக, பாஜக, சுயேட்சை எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

பிஆர்.சிவா (சுயேட்சை): “டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்திய சில பகுதியில் மின் கட்டணம் 10 மடங்கு அதிகமாக வருகிறது. இதனால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் குறித்து ஆராய வேண்டும். இதற்கு கமிட்டி உள்ளதா?”

அமைச்சர் நமச்சிவாயம்: “10 மடங்கு அதிகமாக வர வாய்ப்பே இல்லை. சற்று அதிகமாக கூடுதல் வரலாம். அதற்கும் ஏற்கெனவே கணக்கு எடுக்காமல் விடுபட்டது காரணமாக இருக்கும்.”

நேரு (சுயே): “மின் கட்டண ரசீதில் பல பெயர்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கனெக்டிங் லோடு சார்ஜ் என்ற பிரிவில் கட்டணம் வசூலிக்கின்றனர். வணிக நிறுவனங்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடையை மூடி வியாபாரமே செ ய்யாவிட்டாலும் இந்த கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதேபோல சில கட்டணம் எதற்காக வசூலிக்கப்படுகிறது என்றே தெரியவில்லை. மின் துறை இது குறித்து விளக்க வேண்டும்.”

பிஆர்.சிவா: “ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் அவசியமா? ஏற்கெனவே கட்டண உயர்வால், மின் கட்டணம் செலுத்த மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.”

அமைச்சர் நமச்சிவாயம்: “அரசு கொண்டு வரும் அனைத்தையும் எதிர்ப்போம் என்ற அடிப்படையில் எதிர்க்கக் கூடாது. மின் துறையில் குறைபாடுகளை உறுப்பினர் தெரிவித்தனர். அந்தக் குறைபாடுகளை களைவதற்குத்தான் ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் கொண்டு வருகிறோம். அரசுக்கு நிதியும் தேவைப்படுகிறது. தவறான புரிதலோடு, எதிர்க்க வேண்டாம்.”

அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுந்து நின்று, ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களோடு சுயேச்சை எம்எல்ஏக்கள் நேரு, பிஆர்.சிவா ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்கட்சித் தலைவர் சிவா: “கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.50 கோடியில் டிஜிட்டல் ஸ்மார்ட் மீட்டர் மாற்றினர். ரூ.2 ஆயிரத்து 500 மதிப்புள்ள மீட்டரை ரூ.12 ஆயிரத்து 500 கொடுத்து வாங்கியதாக புகார் எழுந்தது. மத்திய அரசு அனுமதி பெறாமலேயே அதிகாரிகள் இதை வாங்கியுள்ளனர். அந்த அதிகாரிகள் தற்போது தப்பித்து சென்றுவிட்டனர்.”

அமைச்சர் நமச்சிவாயம்: “யார் ஆட்சியில் நடந்தது சிவா நீங்களும், நானும் இருந்த நம்ம ஆட்சி (கடந்த காங்கிரஸ் – திமுக ஆட்சி) காலத்தில் நடந்தது.”

பிஆர்.சிவா, கல்யாண சுந்தரம் (பாஜக): “டிஜிட்டல் ஸ்மார்ட் மீட்டரில் ஊழல் செய்த அமைச்சர், அதிகாரிகள் மீது தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

அமைச்சர் நமச்சிவாயம்: “குற்றச்சாட்டுகளை விசாரிப்போம். ப்ரீபெய்டு மீட்டர் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை அரசு களையும். அதேநேரத்தில் மக்களுக்கு விரோதமான எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது. மக்கள் பாதிக்கப்படும் திட்டங்களையும் கொண்டுவர மாட்டோம்.”

எதிர்க்கட்சித் தலைவர் சிவா: “மக்கள் எண்ணத்திற்கு விரோதமாக ப்ரீபெய்டு மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்” என்று கூறி வெளியேறினார். அவருடன் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோரும் வெளியேறினர். சிறிது நேர இடைவெளிக்கு பிறகு சுயேச்சை எம்எல்ஏக்கள் நேரு, பி.ஆர்.சிவா ஆகியோரும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.