பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை விரைவாக நடத்தி முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
10, 12-ம் வகுப்புகளுக்கு மே மாதத்தில் பொதுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு பாடங்களை விரைவாக நடத்தி முடிக்க தற்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
மாணவர்களின் உயர்கல்வி நலன் கருதி நடப்பு ஆண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கு நிச்சயம்பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித் துறை உறுதியாக உள்ளது. அதற்கேற்ப பாடங்களை விரைவாக நடத்தி முடிக்கவும், திருப்புதல் தேர்வுக்கு சிறந்த முறையில் மாணவர்களை தயார்படுத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றி மாணவர்களின் விடைத்தாள்களை பாதுகாத்து வரவும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். கரோனா பரவல் இன்னும்முழுமையாக விலகாததால் முன்னெச்சரிக்கையாக இத்தகையபணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
10, 12-ம் வகுப்புகளுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9முதல் 16-ம் தேதி வரையும், 2-ம்கட்டமாக மார்ச் 28 முதல் ஏப்.5-ம் தேதி வரையும் நடக்க உள்ளது.