சென்னையில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தினமும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மண்டல நல அலுவலர் மற்றும் மண்டல மருத்துவ அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

உலக நாடுகளிடையே ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவி வரும் நிலையில் சென்னையில் இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்த நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பும் நபர்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள 12 நாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒமைக்ரான் வகை தொற்றை கட்டுப்படுத்த நாள்தோறும் சுமார்20 ஆயிரம் பேருக்கு கரோனாபரிசோதனை மேற்கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் சந்தை பகுதிகளில் வணிகர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் நபர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். வணிகர்களும், பொதுமக்களும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

கடந்த 15 நாட்களில் மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1 சதவீதத்துக்கும் குறைவாக, அதாவது 1,858 பேருக்கு மட்டுமேதொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க மண்டல மருத்துவ அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

5 கண்காணிப்பு அலுவலர்கள்

குறிப்பாக, குறைவாக கோவிட்தடுப்பூசி செலுத்தியுள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. டிச.26-ம் தேதிநடைபெற உள்ள மெகா தடுப்பூசிமுகாமை கண்காணிக்க 3 மண்டலங்களுக்கு ஒரு கண்காணிப்புஅலுவலர் என 15 மண்டலங்களுக்கும் 5 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ்.மணீஷ், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் எம்.எஸ்.ஹேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.