பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள தலைமறைவு ரவுடிகளை கைது செய்ய அனைத்து மாவட்டபோலீஸாருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரேகட்டமாக வரும் 19-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வேட்பாளர்கள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள மாநில பாஜகதலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட சென்னையில் பாஜக தேர்தல் அலுவலகம் சூறையாடப்பட்டது. நாகப்பட்டினத்தில் ஒரு பாஜகபிரமுகரின் காருக்கு தீ வைக்கப்பட்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்துவரும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இதையடுத்து, தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்ய அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்டஎஸ்.பி.களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஏ பிளஸ், ஏ, பி, சி என வகைப்படுத்தப்பட்டுள்ள ரவுடிகளில் சிறையில் உள்ளவர்கள் தவிர தற்போது தலைமறைவாக உள்ளவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் திருந்திவாழப் போவதாகவும், ஓராண்டுகாலத்துக்கு எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என்றும்எத்தனை ரவுடிகள் போலீஸாரிடம் எழுதிக் கொடுத்துள்ளனர் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கடும் நடவடிக்கை

திருந்தி வாழப்போவதாக எழுதிக் கொடுத்த பின்னரும் குற்றச்செயலில் ஈடுபட்டால், பிணையில் வெளியே வரமுடியாத பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபிசைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும், சட்டம் ஒழுங்கைகட்டுக்குள் வைக்கவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.