மணிப்பூரில் ரூ.4,815 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு வடகிழக்கு மாநிலங்கள் முன்னோடியாகத் திகழும் என்று மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.4,815 கோடி மதிப்பில் 5 தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டங்கள், குடிநீர் வசதி, தகவல் தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சார மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட 22 திட்டங்களுக்கு இம்பாலில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், இம்பால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், ஐடிஐ, 200 படுக்கை வசதி கொண்ட கரோனா மருத்துவமனை உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்கறைகொண்டுள்ளது. இதற்காக மணிப்பூர் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வளர்்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இப்போது வடகிழக்கு மாநிலங்களுக்கிடையிலான சாலை இணைப்பு, இளைஞர்களின் திறன்மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை புதுப்பித்தல், சுகாதார மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தோடு மணிப்பூரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன் மத்தியில் இருந்த அரசுகள் மணிப்பூர் மாநிலத்தைப் புறக்கணித்தன. இதனால் மக்கள் அன்னியர்களாகிவிட்டனர். நான்பிரதமராக பொறுப்பேற்ற பிறகுமத்திய அரசின் சார்பில் வளர்ச்சித்திட்டங்களை மணிப்பூர் மக்களின்வீட்டு வாசலுக்கு கொண்டுவந்தேன்.
மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களால் மணிப்பூர் உட்படவடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு வடகிழக்கு மாநிலங்கள் முன்னோடியாகத் திகழும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.