புதுச்சேரி புஸ்சி வீதியில் தனியார் பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பள்ளிச் சிறுமிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

புதுச்சேரி உழவர்கரை நிக்கிஷா (10), மூலகுளம் அவந்திகா (10), திஷா சலோம் (10), அரும்பார்த்தபுரம் ஹர்ஷீதா லஷ்மி (8), தீக்‌ஷாஷா, உழவர்கரை பூர்ணிகா (8), கோபாலன்கடை தட்சதா (10), ரெட்டியார்பாளையம் கிரண்யா (10) ஆகியோர் புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை பள்ளிச் சிறுமிகள் 8 பேரும் ஆட்டோவில் பள்ளிக்கு புறப்பட்டனர். ஆட்டோவை மூலகுளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் விக்னேஷ் (28) என்பவர் ஓட்டி வந்தார்.

புஸ்ஸி வீதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே வந்த ஆட்டோவும், எதிரே வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பள்ளிச் சிறுமிகள் 8 பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ் என அனைவரும் காயமடைந்தனர். ஆட்டோவின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. விபத்தை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீஸார் விபத்துக்குள்ளான பள்ளி சிறுமிகளை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் நிக்கிஷா (10), அவந்திகா (10) ஆகியோர் தலையில் படுகாயமடைந்திருந்தனர். இதில் நிக்கிஷாவுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற சிறுமிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைக் கண்டு கண்ணீர் விட்டு கதறியழுதனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தகவலறிந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக வந்தனர். குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: ”பெற்றோர்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். மருத்துவர்கள் விரைவாக செயல்பட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். சில பெற்றோர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறினர். ஆனால், அவர்களுக்கு இங்கேயே தரமான மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை மருத்துவர்களும் அறுவை சிகிச்சைக் கூடங்களும் தயார் நிலையில் உள்ளது. குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும் விரைவாக குணமடைய இறைவனை வேண்டுவோம்” என்று தெரிவித்தார்.

பிற்பகலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, நேரு எம்எல்ஏ உள்ளிட்டேர் தனித்தனியே விபத்தில் சிக்கிய பள்ளி சிறுமிகளை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காலையில் பள்ளி தொடங்கும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பாக அரசின் பரிசீலனையில் இருக்கிறது. வெகு விரைவில் கல்வித்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளை அழைத்து பேசி முடிவெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்தப்படும்” என்றார்.

இதனிடையே ஆட்டோ, தனியார் பேருந்து மோதிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், விதிகளை மீறி பேருந்து ஒருவழி பாதையில் வந்து கொண்டிருந்த நிலையில், ஆட்டோ அதன்மீது சென்று மோதி விபத்துக்குள்ளாவது பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.