சென்னை: ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘ஜுஜுபி’ (Jujubee) நாளை (ஜூலை 26) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இப்படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ மற்றும் ‘Hukum’ ஆகிய பாடல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராஃப், சுனில் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘ஜுஜுபி’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்தமும் கத்தியுமான அறிவிப்பு போஸ்டர் பாடலின் தன்மையை விவரிக்கும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது.