விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறையும், ஆள் கூலியும் அதிகரித்து வரும் நிலையில், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு பணியை முழுநேரத் தொழிலாக பொறியியல் பட்டாதாரி ஒருவர் மேற்கொண்டு வருகிறார்.

காலத்துக்கேற்ப தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு மாற்றங்கள் விவசாயத்தில் நடைபெற்று வருகிறது. மாடு வைத்து உழுத காலம் மலையேறிவிட்டது. டிராக்டர் மூலம் சிறிய கலப்பை, பெரிய கலப்பை, ரொட்டேட்டர் என பல்வேறு வகையான கலப்பைகள் மூலம் நிலத்தை உழவு செய்து விவசாயத்துக்கு நிலத்தை தயார்படுத்துகின்றனர். விதைப்புக்கு உபகரணம், நடுவதற்கு இயந்திரம், களையெடுக்க இயந்திரம், களையை கட்டுப்படுத்த மருந்துகள், அறுவடைக்கு இயந்திரம் என தேவைக்கேற்ப தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருகின்றன.

ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு முறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கையால் இயக்கும் ஸ்பிரேயர்களுக்கு பதிலாக பேட்டரி மூலம் இயங்கும் ஸ்பிரேயர்கள், மோட்டார் மூலம் இயங்கும் பவர் ஸ்பிரேயர்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருந்து தெளிப்பில் ட்ரோன்களை பயன்படுத்தும் முறை தற்போது பிரபலமடைந்து வருகிறது. அனைத்து விவசாயிகளாலும் சொந்தமாக ட்ரோன் வாங்க முடியாது என்பதால், இதனையே முழு நேரமாக செய்து வருகிறார் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி.

திருவேங்கடம் வட்டம், அழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்பாபு (26) என்ற அந்த இளைஞர் கூறியதாவது: சிவில் இன்ஜினியரிங் படித்துள்ள நான் 4 தையல் இயந்திரங்களை வாங்கி சொந்தமாக சிறிய அளவில் கார்மென்ட் தொழில் செய்து வருகிறேன். சமீப காலமாக ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் தொழில்நுட்பம் அதிகரித்து வருகிறது. சாதாரண விவசாயிகளால் ட்ரோன் வாங்கி மருந்து தெளிப்பது சாத்தியமில்லை.

எனவே, ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு சொந்தமாக ட்ரோன் வாங்கி, விவசாயிகளுக்கு மருந்து தெளித்து கொடுக்கும் தொழிலை செய்ய முடிவு செய்தேன்.

ட்ரோன் ரூ.4 லட்சம், ஒரு செட் ரூ.52 ஆயிரம் வீதம் 4 செட் பேட்டரிகள் மற்றும் பேட்டரிகளை சார்ஜ் செய்ய ரூ.45 ஆயிரம் செலவில் ஜெனரேட்டர் ஆகியவற்றை வாங்கியுள்ளேன். ட்ரோன் மூலம் விவசாயிகளுக்கு மருந்து தெளித்து கொடுத்து வருகிறேன். சாதாரண ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளித்தால் ஓர் ஏக்கருக்கு 10 டேங்க் மருந்து தேவைப்படும். தண்ணீர் தேவையும் அதிகமாக இருக்கும். மருந்து தெளிப்பதற்கு நேரமும் அதிகமாகும். மேலும், வயலில் இறங்கி மருந்து தெளிப்பதால் பயிர்களும் சேதமடையும். மருந்து மூலம் மருந்து தெளிப்பவருக்கு உடல்நிலை பாதிப்பும் ஏற்படும்.

ஆனால் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் இந்த பிரச்சினைகள் இல்லை. ஒரு டேங்க் மருந்தைக்கொண்டு ஓர் ஏக்கர் முழுவதுக்கும் தெளித்துவிடலாம். குறைவான அளவில் தண்ணீர் போதும். 5 நிமிடத்தில் ஓர் ஏக்கர் பரப்பளவுக்கு மருந்து தெளித்துவிடலாம். பயிர்களும் சேதமடையாது. உடலில் மருந்து படாது என்பதால் பாதிப்பும் ஏற்படாது.

சாதாரண ஸ்பிரேயர்களால் வாழை, தென்னை போன்றவற்றுக்கு மருந்து தெளிப்பது சிரமம். ஆனால் ட்ரோன் மூலம் அனைத்து விதமான பயிர்களுக்கும் மருந்து தெளிக்கலாம். குறிப்பாக மக்காச்சோளப் பயிரில் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் படைப்புழு தாக்குதலுக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது.

இதனால் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சங்கரன்கோவிலுக்கு அருகில் உள்ள அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க அழைக்கின்றனர்.

ஓர் ஏக்கர் மருந்து தெளிக்க ரூ.600 கட்டணம் வசூலிக்கிறேன். ஒரு டேங்க் மருந்து தெளித்தால் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும். அதனால் 4 செட் பேட்டரிகள், அவற்றை சார்ஜ் செய்ய ஜெனரேட்டர் வைத்துள்ளேன். இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 40 ஏக்கர் வரை மருந்து தெளித்து கொடுத்துள்ளேன். தென்காசி மாவட்டம் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டது என்பதால் வேலை அதிகமாக வருகிறது” என்றார்.