ராமநாதபுரம்: ராமநாதபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அரசு மானியம் ரூ.28.17 லட்சம் மதிப்பில் 16 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர். ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவு சான்று வழங்கல், தன்னார்வலர்களுக்கான பயிற்சி பணிமனை தொடக்க விழா கீழக்கரையில் நடந்தது.

கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். நவாஸ் கனி எம்பி, எம்எல்ஏக்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி  இயக்கக இணை இயக்குநர் அமுதவல்லி வரவேற்றார். திட்டம் குறித்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் குப்புச்சாமி பேசினார். அடிப்படை சான்றிதழ் வழங்கி பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினர்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஒரு பெண் உள்பட 2 பேருக்கு தலா ரூ.8 லட்சம்  மானியத்துடன் கூடிய நான்கு சக்கர வாகனம், 5 பேருக்கு தலா ரூ.29,488 மானியத்துடன் கூடிய தலா 2 ஐஸ் பெட்டி பொருத்திய இரு சக்கர வாகனம், 5 பேருக்கு தலா ரூ.2 லட்சம் மானியத்துடன் பைபர் படகு, 3 பேருக்கு தலா ரூ.31,600 மானியத்துடன் கூடிய இயந்திரம், ஒருவருக்கு ரூ.28,977 மானியத்துடன் கூடிய இயந்திரம் என 16 மீனவர்களுக்கு ரூ.28.71 லட்சம் மானியத்துடன் கூடிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் திசை வீரன், துணை தலைவர் வேலுச்சாமி,  திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தலைவர் புல்லாணி, மாயாகுளம் ஊராட்சி தலைவர் சரஸ்வதி, முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுந்தரராஜ், முன்னாள் எம்எல்ஏ முருகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து நன்றி கூறினார்.