முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி லுலு நிறுவனம், 3500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 3 திட்டங்களை தமிழகத்தில் மேற்கொள்ளவுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, துபாய் பயணத்தினை முடித்துக் கொண்டு, அபுதாபிக்கு வந்த தமிழகம் முதல்வர் இன்றைய தினம் (மார்ச் 28) கலந்து கொண்ட நிகழ்வுகளின் விவரங்கள் பின்வருமாறு:
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் சந்திப்பு: தமிழகம் முதல்வர் , ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த அபுதாபியில் உள்ள முபாதாலா கோபுரத்தில் உள்ள எமிரேட்ஸ் பேலஸில் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்தார்.
> முபாதாலா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு நிர்வாக இயக்குநர் சையத் அரார் (Thiru. Syed Arar) உடனான சந்திப்பின்போது, தமிழகத்தில், மிகப் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு இந்நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார். ஏற்கெனவே, முபாதாலா நிறுவனம், பிரின்ஸ்டன் டிஜிட்டல் என்ற நிறுவனத்தின் பெயரில் 350 மில்லியன் டாலர் முதலீடுகள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், முபாதாலா நிறுவனம் மற்றும் தமிழகம் உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் (TNIFMC) நிறுவனங்களுக்கிடையே ஒரு பணிக்குழுவை அமைத்து, தமிழகத்தில் உள்ள பசுமை எரிசக்தி, சாலை திட்டங்கள், தொழிற் பூங்காக்கள் மற்றும் உடனடியாக துவங்கும் திட்டங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான விடுதிகள் மற்றும் தகவல் தரவு மையங்கள் போன்ற மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுத்திடவும் முதல்வர் , முபாதாலா நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.
> அபுதாபி வர்த்தக சபை தலைவரும், ஐக்கிய அரபு நாடுகளின் வர்த்தக சபை மற்றும் அரபு வர்த்தகக் கூட்டமைப்பு தலைவருமான H.E அப்துல்லா முகமது அல் மஸ்ரோயீ (H.E Abdulla Mohammed Al Mazroeui) உடனான சந்திப்பின்போது, அபுதாபி நிறுவனங்கள் தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல், உணவுப் பூங்காக்கள், குளிர்பதனக் கிடங்குகள், சரக்கு மற்றும் சேவைகள், வணிகத்தீர்வை திட்டங்கள் போன்றவற்றில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும், தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்களை ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு/வடக்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு மேற்கொள்ள ஆர்வமுள்ள நிறுவனங்கள், குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள், தடையில்லா வர்த்தக மண்டலங்கள், கிடங்குகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களில் முதலீடு செய்திடலாம் என்றும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் ஓசூர் போன்ற நகரங்களில் தொழில், சேவை மற்றும் சில்லரை வணிகங்கள் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு இவ்வாறான உள்கட்டமைப்புத் தேவைகள் அதிகம் உள்ளது என்றும், எனவே, இத்துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறும், அபுதாபி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
> ADQ நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி, H.E முகம்மது அல் சுவைதி (H.E Mohammed Al Suwaidi) உடனான சந்திப்பின்போது, தமிழகம் முதல்வர், தமிழகத்தில் மருத்துவ சுகாதார திட்டங்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற திட்டங்களில், முதலீடுகள் மேற்கொள்ளுமாறு, இந்நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.
லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருடன் சந்திப்பு: மேற்கொண்ட சந்திப்புகளை முடித்துக் கொண்டு, தமிழகம் முதல்வர் , லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசுஃப் அலி அவர்களை இன்று அவரது அபுதாபி இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: இந்த சந்திப்பின்போது, தமிழகம் முதல்வர் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. லுலு நிறுவனம், 3,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 3 திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. அதில், 2,500 கோடி ரூபாய் முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் 1,000 கோடி ரூபாய் முதலீடுகளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் நிறுவிட லுலு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்வுகளின்போது, தமிழகம் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண் ராய், , வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.