இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக காலா திரைப்படம் வெளியானது. 3 வருடத்திற்கு பிறகு சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு சென்ற போதிலும் அவர்கள் நம்மிடத்தில் விட்டுச்சென்ற பொழுதுபோக்கு விளையாட்டான குத்துச்சண்டை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை பின்புலமாக வைத்து படத்தின் கதையை தயார் செய்துள்ளார். தனக்கே உரிய பாணியில் அரசியல் கருத்துக்களையும் அழுத்தமாக இந்த படத்தின் மூலம் பதிவு செய்துள்ளார். 80’களில் வடசென்னையில் நடக்கும் ரோஷமான ஆங்கில குத்துசண்டையை இந்த படத்தின் மூலம் கண்முன்னே காட்டியுள்ளார். கதையில் ஒரு தெளிவை கொண்டு வர கதை சார்ந்த விஷயங்களை பா.ரஞ்சித் ஆராய்ந்து செய்துள்ளது பாராட்டிற்குரியது. அதிகமான ஜாதி குறியீடுகள் இல்லாமல் மிகவும் மேலோட்டமாக ரஞ்சித் சொன்ன விதம் சிம்ப்லி சூப்பர்
வடசென்னையில் நிறைய பாக்ஸிங் பரம்பரைகள் உள்ளன. இதில் சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் பல காலமாகப் போட்டி இருக்கிறது. கடைசியில் ஒரு போட்டி, அதில் யார் ஜெயிக்கிறார் என்று பார்த்துக் கொள்வோம். அதில் தோற்றுவிட்டால் சார்பட்டா பரம்பரை இனி சண்டையே போடாது என்று போட்டிக்கு ஒப்புக்கொண்டு வருகிறார் பசுபதி. எப்படி ஜெயிக்கிறார்கள் என்ற சின்ன கதை தான் ‘சார்பட்டா பரம்பரை’. ஆனால், அதன் களம், காலம், கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு ஒரு சிறப்பான சினிமா அனுபவத்தைக் கொடுத்துள்ளார் பா.இரஞ்சித். அவரோடு சேர்ந்து திரைக்கதை அமைத்துள்ள தமிழ்ப்பிரபாவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சிறப்பான பங்களிப்பு பசுபதி, கலையரசன், அனுபமா குமார், ஜீ எம் சுந்தர் , ஜான் விஜய் , சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கென், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாத்தியாராக நடித்துள்ள பசுபதி அந்த கதாபாத்திரமாகவே மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகன் என்பதை மீண்டும் நிலை நாட்டியுள்ளார். மெட்ராஸ், கபாலி போலவே இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் கலையரசன் நடித்துள்ளார். சார்பேட்டாவுக்கு எதிர் அணியாக இடியாப்ப பரம்பரையின் வழிகாட்டியாக ஜி.எம் சுந்தர் எதார்த்த வசனங்களை பதார்த்தமாக பதம் பார்க்கிறார் . வட சென்னையின் வாழ்க்கை அந்த வட்டார வழக்கு என்று வசனங்கள் வரும் போது கொஞ்சம் கெட்ட வார்த்தைகளும் வருகிறது. சென்னையில் அதிகம் கேட்ட வார்த்தைகளையும் எல்லா கதாபாத்திரங்களும் பயன்படுத்துகிறார்கள் . அதிகமான கதாபாத்திரங்கள் படத்தில் இடம் பெற்றாலும் டாடி என்று செல்லமாக அழைக்க படும் ஜான் விஜய் கதாபாத்திரம் மனதில் நிற்கும் . ஜான் விஜய் பேசிய ஆங்கில வசனங்கள் , வார்த்தைகளின் உச்சரிப்பு பாடி லாங்குவேஜ் அனைத்தும் தனித்துவத்துடன் ரசிக்க வைக்கிறது
இந்தப் படத்தை திரையரங்கில் காண முடியவில்லையே என்ற ஏக்கத்தை உருவாக்குகிறது ‘சார்பட்டா பரம்பரை’. ஒளிப்பதிவாளர் முரளி, எடிட்டர் செல்வா, சந்தோஷ் நாராயணன் இசை, ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம், சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ், சவுண்ட் டிசைனர் ஆண்டனி ரூபன், கலை இயக்குநர் ராமலிங்கம், கலரிஸ்ட், தயாரிப்பு வடிவமைப்பு என்று அனைவருமே படத்தின் கதைக்களத்துக்கு அபாரமான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.
வழக்கமான கிளைமாக்ஸ் படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் தான் என்று பலர் சொன்னாலும் பீரியட் ஃபிலிம் என்று வரும்போது அதை இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்து சில காட்சிகள் ட்ரிம் செய்து இருக்கலாம் . கலையரசன் கதாபாத்திரம் அதிக குழப்பங்கள் நிறைந்த மனநிலையில் படம் முழுக்க வந்து போவதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் . படத்தின் கிளைமாக்ஸ் இது தான் என்று ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் முதல் காட்சியிலியே புரிந்து விடுகிறது . தமிழ் சினிமாவின் வழக்கமான கிளைமாக்ஸ் என்பது அனைவருக்கும் மிக எளிதில் தெரிந்து விடுகிறது