திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, பொங்கலூர், குண்டடம் வட்டாரங்கள் மற்றும் திருப்பூரை ஒட்டியுள்ள ஈரோடு மாவட்ட பகுதிகளான சென்னிமலை, அரச்சலூர், கொடுமுடி, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு பயிரிடப்படும் சின்ன வெங்காயம், மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் மூலமாக விவசாயிகளிடம் நேரடியாகவும், சந்தைகள் மூலமாகவும் கொள்முதல் செய்யப்பட்டு, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
நடப்பு ஆண்டு மே, ஜூன் மாதங்களில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம், தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. சந்தையில், அளவில் பெரிய சைஸ் கொண்ட சின்ன வெங்காயம் கிலோ ரூ.45 வரையும்,சிறிய சைஸ் கிலோ ரூ.35 மற்றும் ரூ.100-க்கு 3 கிலோ வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
உற்பத்திக்கு நெருக்கமான விலை
இதுகுறித்து பல்லடத்தை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார் கூறும்போது, “தரமான பெரிய சைஸ் அளவு கொண்ட சின்ன வெங்காயம், கடந்த இரண்டு மாதங்களாக கிலோ ரூ.40 முதல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரையிலும், அளவில் சிறிய சைஸ் சின்ன வெங்காயம் ரூ.10முதல் ரூ.15 வரை மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. உற்பத்திக்கு நெருக்க மாக இந்த விலை இருப்பதால் உரிய லாபம் கிடைப்பதில்லை” என்றார்.
போக்குவரத்து சிக்கல்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. தற்போது விலை கடுமையாக குறைந்துள்ளது. கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. விலை குறைவுக்கு, வடமாநிலங்களில் கடும் மழை பெய்து வருவதே முக்கிய காரணம். ஆந்திராவுக்கு சில நாட்களுக்கு முன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட சின்ன வெங்காயம் வெள்ளத்தில்சிக்கின. லாரி ஓட்டுநர்கள் உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாகிவிட்டது. போக்குவரத்து பெரிய சிக்கலாக மாறியுள்ளதால், வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் வியாபாரிகள் பலர் வாங்க வருவதில்லை.
விளைச்சல் குறைவு
கரோனா தாக்கத்தால் உள்ளூர் மக்களிடம் வாங்கும் திறனும் குறைந்துள்ளது. இதனால் உள்ளூர்வியாபாரிகளும் கொள்முதலை குறைத்துள்ளனர். சில வியாபாரிகள் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் விலை பேசி, அதிகளவில்வாங்கி இருப்பு வைக்க தொடங்கிவிட்டனர். விலை குறைவாக கொள்முதல் செய்யப்படுவது, ஏக்கருக்கு 10 டன் விளைந்தால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நல்ல விலை கிடைத்ததால், அனைத்து விவசாயிகளும் மறுநடவு செய்தனர். ஆனால், விளைச்சலானது ஏக்கருக்கு 3 முதல் 4 டன்னாக குறைந்துவிட்டது. இதனால், விலை சரிவு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை முன்கூட்டிய அரசு கவனித்து பதுக்கலை தடுக்கவும், விலை சீராக இருக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.