உலக அளவில் நிலவும் ஒமைக்ரான் பீதி காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால் இரண்டு நாட்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.11.23 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பற்றிய கவலை நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.

இந்தநிலையில் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டித்தும் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது.

இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த சரிவு இன்றும் தொடர்ந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,158புள்ளிகள் சரிவடைந்தன.

காலை 9:45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,108 புள்ளிகள் குறைந்து 55,903 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 339 புள்ளிகள் அல்லது 2 சதவீதம் சரிந்து 16,646 ஆகவும் இருந்தது.

பிற்பகலில் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் அல்லது 3.2 சதவீதத்திற்கு மேல் சரிந்தது. நிஃப்டி 16,450க்கு கீழே சென்றது. இதுபோலவே ஆசிய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன.

கச்சா எண்ணெய் விலையும் சரிந்தது. ஒமைக்ரான் பீதி காரணமாக ஐரோப்பாவில் இறுக்கமான சூழல் உள்ளதாகவும், இதனால் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள சூழலில் உலகப் பொருளாதாரம் மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டாடா ஸ்டீல் லிமிடெட், தேசிய பங்குச்சந்தையில் 2.3 சதவீதம் சரிந்தது. பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் இரண்டு நாட்களில் ரூ.11,23,010.78 கோடி குறைந்து ரூ. 2,52,79,340.30 கோடியாக இருந்தது.

உலக அளவில் நிலவும் ஒமைக்ரான் பீதி காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.11.23 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ஆண்டு இறுதி என்பதால் பரவலாக விடுமுறைக்கு முன்னதாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் வைத்துள்ள தங்கள் பங்குகளை விற்று லாபம் ஈட்ட முனைந்துள்ளதாலும் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.