44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் தொடங்கியது. இரண்டு அரங்குகளில் நடைபெற்று வரும் போட்டியில் 177 அணிகள் பங்கேற்றுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கியது. இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவு. இன்று மாலை 3 மணிக்கு அந்த போட்டிகள் தொடங்கியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியளிப்பதோடு, பெருமையாகவும் இருக்கிறது.

நேற்று நடந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்வு உலகமே வியந்து பார்க்கும் வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் நிகழ்வாக அமைந்திருந்தது.

187 நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பார்வையாளர்கள் கலந்துகொண்ட பிரமாண்ட தொடக்க விழா நேற்று நடந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரங்கம் 1 மற்றும் அரங்கம் 2 என இரண்டு அரங்குகளிலும் கிட்டத்தட்ட 177 அணிகளுக்கு இடையிலான போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.

இதற்கு முன்பு நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைவிட ஏற்பாடுகளும், உபசரிப்புகளும் சிறப்பாக உள்ளதாக வீரர் வீராங்கனைகள் தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினம் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்று போட்டிகளை கண்டு வருகின்றனர்” என்று அவர் கூறினார்.