விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை முதல்வர் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக, கேரள மாநிலம் கொச்சி திரவ எரிவாயு முனையத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக பெங்களூரு வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொள்ள முயற்சித்தது. இதுதொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், ‘‘விவசாய நிலங்கள் வழியாக குழாய் அமைக்க கூடாது. தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்’’ என்று விவசாயிகள், நில உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்று, கெயில் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இருந்தபோதிலும், இத்திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓசூர் வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாய நிலங்கள் இடையே குழாய் அமைக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். நானும் இதை கண்டித்து அப்போதே அறிக்கை வெளியிட்டேன்.

தற்போது, தருமபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் 3 நாட்களாக எரிவாயு குழாய் அமைக்க நில அளவீடு செய்யப்படுகிறது. இதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, தனது நிலம் பறிபோகும் என்ற பயத்தில் கரியப்பனஅள்ளியை சேர்ந்த விவசாயி கணேசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்செய்தி மன வேதனை அளிக்கிறது.

வேளாண்துறை சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, தற்போது விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை திமுக அரசு வேடிக்கை பார்த்து, வஞ்சிக்கிறது.

இதுகுறித்து உடனடியாக கெயில் நிறுவனத்திடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி, நெடுஞ்சாலை ஓரமாக குழாய்களை அமைக்க வலியுறுத்த வேண்டும். உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.