சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு அரையாண்டிலும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு, வரியில் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மாநகராட்சிக்கு முதல் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) அரையாண்டுக்கு உரிய சொத்து வரியை, அரையாண்டு காலம் தொடங்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை செலுத்துவோருக்கு மாநகராட்சி அறிவித்துள்ள 5 சதவீத ஊக்கத்தொகை கிடைக்கும். ஏப்.16-ம் தேதி முதல் சொத்து வரி செலுத்துவோருக்கு, அவரது சொத்து வரியில் 2 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.

சென்னையில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ள நிலையில், மாநகராட்சியின் இந்த சலுகையைப் பயன்படுத்தி ஏப். 15-ம் தேதிக்குள் 2 லட்சத்து 868 சொத்து உரிமையாளர்கள், உரிய காலத்தில் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். அவ்வாறு கடந்த 15 நாட்களில் மொத்தம் ரூ.119 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2 கோடியே 50 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட சொத்து வரி மதிப்பீடு செய்த பிறகு, ஏற்கெனவே சொத்து வரியை செலுத்தியவர்கள், முதல் அரையாண்டுக்கான நிலுவை சொத்து வரியை செலுத்த வேண்டியிருக்கும். அதற்கும் 5 சதவீத கழிவு வழங்கப்படுமா என்பது குறித்து மாநகராட்சி மன்றம் தீர்மானிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.