தரம் குறைந்த பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கி, ஊழலில் திளைத்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி நேற்று (20.1.2022), மூன்றாம் தர அரசியல்வாதி போல், நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிக்காமல், தவறு செய்யும் பிள்ளை, தன் தவறை மறைக்க, பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடும் என்பது போல் பிதற்றி இருக்கிறார்.
அனைத்து சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும், இந்த திமுக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பின் லட்சணத்தைப் பற்றி பொதுமக்களே கழுவி கழுவி ஊற்றுவதை அமைச்சர் சக்ரபாணி கண்டுகொள்ளாமல், தனது காதுகளையும், விழிகளையும் மூடிக்கொண்டுள்ளாரோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. துரோகம் செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள திருட்டு தில்லுமுல்லு திமுக-வின் மிரட்டல் உருட்டல்களுக்கு அஞ்சாத எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழி வந்தவர்கள் நாங்கள் என்பதை, ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சியினரை, தனது ஏவல் துறை மூலம் மிரட்டிக் கொண்டிருக்கும் திமுக அரசிற்கு தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் நாட்டில் சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,296.88 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 2022ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.
கடந்த ஆண்டுகளில் அதிமுக அரசு ஆட்சியில் இருந்த போது பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் பணக் கொடையுடன் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருட்களைப் பற்றியோ, அதன் தரத்தைப் பற்றியோ பொதுமக்கள் யாரும் எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தொடர்ந்து அதிமுக அரசும், எப்போதும் தமிழக மக்களுடைய நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்து மக்களுக்கு வழங்கியது. ஆனால், திமுக அரசின் பொங்கல் தொகுப்பு பொருட்களைப் பற்றி சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கூறப்படும் குறைகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மொத்தப் பொருட்கள் 21. ஆனால், பெரும்பாலான கடைகளில் 15 முதல் 18 பொருட்களே வழங்கப்படுகிறது. பெரும்பாலான பொருட்களின் எடை குறைவாகவே வழங்கப்படுகிறது. பொருட்களின் தரம் : அரிசியில் புழு, கோதுமை மாவில் வண்டு, ரவையில் செல் பூச்சி, புளியில் இறந்த பல்லி மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் பழைய புளி, வெல்லத்தில் நோயாளிக்கு பயன்படுத்திய சிரிஞ்ச் மற்றும் பயன்படுத்த முடியாத படி ஒழுகிய நிலையில் தரமற்ற வெல்லம், மிளகு, முந்திரி மற்றும் ஏலக்காய் போன்றவற்றில் கலப்படம்,
தரம் குறைவு மற்றும் குறைவான எடை, பரிசுப் பொருட்களை போட்டுத் தருவதற்கான மஞ்சப் பை பெரும்பான்மையானவர்களுக்கு வழங்கப்படவில்லை, ஒரு கரும்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ. 33/-. ஆனால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ. 13 முதல் 16 வரை மட்டுமே, இப்பொருட்களின் மொத்த மதிப்பு தமிழ் நாட்டில் உள்ள கடைகளில் அரசு ஒதுக்கீடு செய்த தொகையைவிட மிகவும் குறைவு.
எனவே தான், எங்களது கழக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் நேற்றைய பேட்டியில், குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், பொருட்களின் தரத்தைப் பற்றியும் சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும், பொதுமக்கள் கூறியவற்றை விரிவாக பேட்டி அளித்தார்.
ஆனால், அமைச்சர் சக்ரபாணி, எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், பொய்யிலே பிறந்து, பொய் சேற்றிலே உருளும் புழு போல் வளைந்து, நெளிந்து பதில் அளித்துள்ளார். இந்த திமுக அரசே பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெளிவந்த பல புகார்களை அடுத்து பல நடவடிக்கைகளை எடுத்ததாக அறிவித்துள்ளது. அந்தந்த மாவட்டங்களுக்கு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் சென்று ஆய்வு செய்ய திமுக அரசு அறிவுறுத்தி செய்தி வெளியீடு.
தரம் குறைவான பொருட்கள் வழங்கப்பட்டால் அதை மீண்டும் நியாய விலைக் கடையிலேயே திருப்பிக் கொடுங்கள் என்று அமைச்சர் சக்ரபாணியே இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தபோது, சுமார் 2.15 டன் வெல்லம் தரம் குறைவாக உள்ளதாகவும், அதனை உடனே மாற்றித் தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. திருப்பத்தூரில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல பொருட்கள் தரமற்றதாக உள்ளது என்று வலைதளங்கள் மூலம் உண்மையை ஒத்துக்கொண்ட அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன.
இன்றைய (21.1.2022) தினம் தினகரன் நாளிதழில் உணவுத் துறை அமைச்சர் சக்ரபாணி சில இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதை மாற்றிக் கொடுத்ததோடு, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பொங்கல் தொகுப்பு பற்றி வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தி வெளியீட்டில் இருந்தே உணவுத் துறை அமைச்சர் சக்ரபாணி இந்த பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். நாங்கள் கேட்பதெல்லாம், ஏன் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீதோ, இதற்குக் காரணமானவர்கள் மீதோ திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, குற்றம் சாட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொதுவெளியில் பேட்டி அளிக்கிறார்.
திருத்தணியில் புளியில், இறந்த பல்லி இருந்ததை சமூக வலைதளங்களில் கூறியவர் மீது ஜாமினில் வர இயலாத வகையில் வழக்குப் பதிவு செய்ததால், அவரது ஒரே மகனை அந்தக் குடும்பம் இன்று இழந்து தவிக்கிறது. தனக்குக் கீழ் உள்ள ஏவல் துறை மூலம், புகார் கூறும் பொதுமக்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டுவதை விட்டுவிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் தவறு இழைத்தவர்கள், ஊழல் செய்தவர்கள் மீது
இதுவரை நடவடிக்கை எடுக்காத இந்த அரசை கடுமையாகக் கண்டிக்கிறோம்.
இதை, பொறுப்புள்ள எதிர்க்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும், சட்டப்படி நடவடிக்கைகள் எடுப்போம் என்றும் இந்த திமுக அரசை எச்சரிக்கை செய்கிறோம். கோடிக்கணக்கான அப்பாவி ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல கோடி ரூபாய் கமிஷன் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்கிறோம்.”
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.