நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த திரையரங்குகளில் வெளியாகிறது. சிம்புவின் மாநாடு உள்ளிட்ட சில படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா தயாரித்து நடித்துவரும் ஜெய் பீம் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் நான்குப் படங்களை அமேசான் பிரைம் வீடியோ வாங்க ஒப்பந்தம் போட்டிருந்தது. முதல் படமாக இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் சமீபத்தில் வெளியானது.
இதனையடுத்து ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி நடிப்பில் சரவணன் இயக்கியுள்ள உடன்பிறப்பே திரைப்படம் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 வெளியாகும் என அறிவித்தனர். மூன்றாவது படமாக சூர்யா நடித்திருக்கும் ஜெய் பீம் நவம்பர் 2 வெளியாகிறது.
ஜெய் பீம் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். மலைவாழ் மக்களின் உரிமைக்காக சட்டரீதியாக போராடி நீதி வாங்கித் தரும் கதையிது. கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கிய ஞானவேல் படத்தை இயக்கியுள்ளார்.
அரசியல் சார்ந்த விஷயங்கள் ஜெய் பீமில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவுடன் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோ மோள் ஜோஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த திரையரங்குகளில் வெளியாகிறது. சிம்புவின் மாநாடு உள்ளிட்ட சில படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு இரு தினங்கள் முன்பு ஜெய் பீம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. சோனிலிவ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஸீ 5 போன்ற ஓடிடி தளங்களும் தீபாவளிக்கு புதிய படங்களை வெளியிடும் திட்டத்தில் உள்ளன.