தமிழகத்திலிருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல் திட்டத்தைச் செயல்படுத்திட 25 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, நான் முதல்வன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > ஆண்டுக்கு ஐந்து லட்சம் இளைஞர்களை, படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகள் அடையாளம் காணப்பட்டு, அவை ஊக்குவிக்கப்படும். மேலும், தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்புத் திறன்பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்களின் வேலை பெறும் திறன் (employability) பெருகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலகமெங்கும் பல நாடுகளில் விஞ்ஞானிகளாக, பேராசிரியர்களாக, தொழில் நிபுணர்களாக தமிழர்கள் தங்களது துறையில் சாதனை புரிகிறார்கள். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆராய்ச்சித் திறனை உயர்த்துதல், மாணவர்களுக்கு வழிகாட்டுதல், வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றை இவர்களுடன் இணைந்து செயல்படுத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்.

ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்குவதில் வெற்றி கண்ட, “ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்” (Olympic Gold Quest) போலவே, தமிழகத்திலிருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல் திட்டத்தைச் செயல்படுத்திட 25 கோடி ரூபாய் வழங்கப்படும்.

பல்வேறு விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற வடசென்னையில், இளைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றை அரசு உருவாக்கும். கைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி, உள்ளரங்க விளையாட்டுகள் மற்றும் நவீன உடற்பயிற்சிக்கூட வசதிகளுடன், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் இவ்வளாகம் அமைக்கப்படும்.

> சதுரங்க விளையாட்டிற்கு உலகில் மிகவும் புகழ்பெற்ற போட்டி சதுரங்க ஒலிம்பியாட் (Chess Olympiad) ஆகும். பொதுவாக, இந்த போட்டியை நடத்துவதற்கு நாடுகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை, இந்த போட்டியை நடத்த இந்தியாவிற்கு வாய்ப்பு எட்டவில்லை. இவ்வாண்டு, இந்த அரசின் சீரிய முயற்சிகளின் பயனாக முதன்முறையாக சதுரங்க ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 150 நாடுகளைச் சேர்ந்த 2000 முன்னணி சதுரங்க வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். தமிழகத்தின் விளையாட்டு துறையில் இது ஒரு திருப்புமுனையாக அமையும். இந்தப் போட்டியை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் இந்த அரசு வழங்கும்.

இம்மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 293.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.