அண்ணாவின் பெயரால் ‘அண்ணா தி.மு.க.’ என்று கட்சி வைத்துள்ளனர்; ஆனால், அண்ணாவின் கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நேற்று (4.5.2022) தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதங்களின்போது, அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் நத்தம் விசுவநாதனும், அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் முதல்வரை நோக்கி சில அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்று ‘தீபாவளி பண்டிகை’க்கு வாழ்த்துச் சொல்வதில்லையே முதல்வரைக் என்று கேட்டுள்ளனர். இதுபோல அவர்களில் சிலர் கேட்பதும் உண்டு.

 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அந்த அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோதோ – அதற்கு முன்போ ”தீபாவளி பண்டிகை”க்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறாரா? ஏன் சொல்லவில்லை? காரணம் வெளிப்படை.

திராவிடர்களை, ”அசுரர்கள், அரக்கர்கள்” என்று கூறி, கொன்று அழித்த கதை மட்டுமல்ல; ”இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்தான். அதனை மீட்க மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து, கடலுக்குள் சென்று பூமியை மீட்டார்; பிறகு பூமாதேவிக்கும் – பன்றி அவதார மகாவிஷ்ணுவிற்கும் பிறந்த குழந்தை நரகாசுரன். அவனை கிருஷ்ணாவதாரம் எடுத்துக் கொன்றார். அந்த நாள்தான் தீபாவளி” என்று சற்றும் அறிவுக்குப் பொருந்தாத, பகுத்தறிவிற்கும், மனிதாபிமானத்திற்கும் விரோதமான கதைக்கு உண்மையான ‘திராவிட மாடல் ஆட்சி’ முதல்வர் வாழ்த்துச் சொல்ல வேண்டுமா?

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். தனது மதம் ‘திராவிட மதம்’ என்று பதிவு செய்தது மறந்துவிட்டதா? இப்படியா பாஜகவின் குரலாக நீங்கள் மாறுவீர்கள் – வெட்கமாக இல்லையா?” இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.