கரோனா பாதித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவகோட்டை பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

தேவகோட்டையைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மனைவி மீனாட்சி (33). இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில், செயற்கை கருத்தரித்தல் முறையில் கர்ப்பமானார். இந்நிலையில், மீனாட்சிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக, ஜூன் 16-ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினையும் இருந்தது. மேலும், ஸ்கேன் செய்ததில் அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் காயத்ரி, குணா, பீர்முகமது, வைரவராஜன் ஆகியோர், தொடர் சிகிச்சை அளித்தனர். இதில், அவருக்கு கரோனா குணமான நிலையிலும், நுரையீரல் பாதிப்பு 30 சதவீதம் இருந்தது. இதனால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

குழந்தைகள் தலை திரும்பாததால் நேற்று (ஜூலை 23) அறுவை சிகிச்சை செய்து இரட்டை குழந்தைகளை வெளியில் எடுத்தனர். இதில், ஆண் குழந்தை 2.2 கிலோவும், பெண் குழந்தை 2 கிலோவும் இருந்தன. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதிபாலன், கண்காணிப்பாளர் பாலமுருகன், துணை முதல்வர் ஷர்மிளா திலகவதி, நிலைய மருத்துவ அதிகாரி முகமதுரபீக் ஆகியோர் பாராட்டினர்.