புதுச்சேரியைப் போன்று தெலங்கானாவில் ராஜ்நிவாஸில் மக்களை சந்திக்க ஆளுநர் தமிழிசைக்கு திராணி உள்ளதா என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: “சூப்பர் சிஎம் ஆக இருப்பதை படிப்படியாக துணைநிலை ஆளுநர் தமிழிசை நிரூபணம் செய்கிறார். தற்போது புதுச்சேரி ராஜ்நிவாஸில் மக்கள் குறைகேட்பைத் துவக்கியுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது.

மக்களால் தேர்வான அரசை அவர் அவமதிக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. கிரண்பேடி காலத்தில் உருவான நிலை இன்னும் தொடர்கிறது. கூட்டணி அரசில் பாஜக படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி என்ஆர் காங்கிரஸை டம்மியாக்குகிறது. இணக்கமாக இருப்பது போல் செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியின் முதுகில் குத்துகிறார்.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஆட்சி செய்வதை வழக்கமாக்கியுள்ளனர். புதுச்சேரியில் அரசுடன் இணைந்து செயல்படுவதாக ஆளுநர் தமிழிசை நாடகமாடி இரட்டை ஆட்சி நடத்துகிறார். முதல்வர் ரங்கசாமியோ தனக்கு முதல்வர் நாற்காலி மட்டும் போதும் என செயல்படுகிறார்.

ராஜ்நிவாஸில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வை தொடங்கியவுடனே கூட்டணியிலிருந்து முதல்வர் ரங்கசாமி வெளியே வர வேண்டாமா ? ராஜ்நிவாஸில் மக்களை நேரடியாக சந்திப்பதை புதுச்சேரி பாஜக ஏற்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும். புதுச்சேரியைப் போன்று தெலங்கானாவில் ராஜ்நிவாஸில் மக்களை ஆளுநர் தமிழிசை சந்திக்கும் திராணி உள்ளதா?

புதுச்சேரியில் ஆறு மதுபான ஆலைகள் வர ரூ.90 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக பாஜக எம்எல்ஏ குற்றம்சுமத்தியிருந்த சூழலில் அதற்கு உரிமம் தரப்பட்டுள்ளன. ஆலை தொடங்க முதலில் தொழில்துறை பரிசீலிக்க வேண்டும். ஆனால், அதை பரிசீலிக்காமல் கலால்துறை உரிமம் தந்துள்ளது.

அதன்பிறகு தொழில்துறை, சுற்றுச்சூழல் துறைகளின் அனுமதி பெற உரிமம் பெற்றவுடன் குறிப்பிட்டுள்ளன. மதுபான ஆலைகளுக்கு உரிமம் தந்துள்ளது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். மின்துறை தனியார் மயமாக்கத்துக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

அடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் இதை ரத்து செய்வோம். திமுகவில் வாரிசு அரசியல் என்று குறிப்பிடும் தமிழிசை, முதலில் அவர் முதுகை பார்க்கவேண்டும்” என்று கூறினார். திமுக வாரிசு அரசியலை நோக்கி செல்வதாக தமிழிசை குறிப்பிட்டுள்ளாரே என்று கேட்டதற்கு, “தமிழிசை அரசியலில் வாரிசு இல்லையா?” என்று நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.