சென்னை தரமணி ராஜீவ்காந்தி சாலையில் 24 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது ‘விஎச்எஸ்’ (வாலண்டரி ஹெல்த் சர்வீஸஸ்) மருத்துவமனை.

மருத்துவர் கே.எஸ்.சஞ்சீவியால் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இம் மருத்துவமனையில் அன்றுமுதல் இன்றுவரை குறிப்பிட்ட சிகிச்சைகள் இலவசமாகவும், மற்ற சிகிச்சைகள் குறைந்த கட்டணத்திலும் அளிக்கப்பட்டு வருகிறது. 165 படுக்கைகளுடன் செயல்படும் இம் மருத்துவமனையில் இதயம், சிறுநீரகம், எலும்பு, நரம்பியல், காது – மூக்கு – தொண்டை, தோல், கண்,பல் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறைகளும் செயல்படுகின்றன.

நவீன கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கங்கள் உள்ளன. இதன்மூலம், நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கருவுற்ற பெண்களுக்கு ஆரம்பம் முதல் பரிசோதனைகள்மட்டுமின்றி சுகப்பிரசவமும் சிறந்த முறையில் பார்க்கப்படுகிறது. சிசேரியனும் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கென பிரத்யேகமாக குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவுகள் உள்ளன.

விபத்து, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட அவசரகால சிகிச்சைக்காக 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அவசரசிகிச்சை பிரிவும் உள்ளது. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டயலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல், போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதை மீட்பு மையம், முதியோர் கவனிப்பு மையம், எச்ஐவி/எய்ட்ஸ் சேவை மையம், மறுவாழ்வு மையம், ரத்த வங்கி, மருந்தகம், ஆம்புலன்ஸ் சேவை போன்றவைகளும் உள்ளன.

எக்ஸ்ரே, இசிஜி, சிடி ஸ்கேன், டெக்ஸாஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எண்டோஸ்கோப்பி உள்ளிட்ட அனைத்து பரிசோதனைமையங்கள், ஆய்வகங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் இருப்பதால் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோயாளிகளுக்கு யோகா, தியானம் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இதனால், ஏழை மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் குறைவான கட்டணத்தில் நிறைவானமருத்துவ சேவையை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக விஎச்எஸ் மருத்துவமனையின் கவுரவ செயலாளர் மருத்துவர் எஸ்.சுரேஷ், நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் எம்.சி.வாசுதேவன் ஆகி யோர் கூறியதாவது:

மருத்துவர் கே.எஸ்.சஞ்சீவி, இந்தியாவில் முதல்முறையாக ஆரம்ப சுகாதார நிலையம் என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தார். விஎச்எஸ் மருத்துவமனையை தொடங்கிய அவர், 50 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரம் மக்களுக்கு ஒன்று வீதம் 10 ஆரம்ப சுகாதார நிலை யங்களைத் தொடங்கினார். அப்பகுதியில் உள்ள இருவரை (மருத்துவரோ, செவிலியரோ அல்லாதவர்) ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்தினார். அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, சளி உள்ளிட்ட சாதாரண பிரச்சினைகளை எப்படி பார்க்கவேண்டுமென்று பயிற்சியும் கொடுத்தார். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருபவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சைகள் மட்டும்அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் விஎச்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சமூக மருத்துவமனையாக செயல்பட்டுவந்த விஎச்எஸ், உயர் சிறப்பு மருத்துவமனையாக 1978-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. மருத்துவர் கே.எஸ்.சஞ்சீவி, பலரிடம் நன்கொடை பெற்று 24ஏக்கர் நிலத்தை வாங்கி விஎச்எஸ் மருத்துவமனையைத் தொடங்கினார். அதேபோல்,தற்போதும் பலரிடம் நன்கொடை பெற்று மருத்துவமனையை பராமரிக்கிறோம். புதிய மருத்துவத் துறைகளை தொடங்குவதோடு, தேவையான மருத்துவ உபகரணங்களையும் வாங்குகிறோம். நோயாளிகளுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளிக்கிறோம்.

எச்ஐவி-க்கு தனியாக சிகிச்சை மையம்இங்குதான் முதலில் தொடங்கப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எச்ஐவிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பிரபலமாக உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் இந்த மருத்துவமனையில் சேவை செய்துள்ளனர். இப்போதுகூட மூத்த மருத்துவர்கள், பகுதி நேரமாக சேவை செய்து வருகின்றனர். மருத்துவமனையிலும் நிரந்தர மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். மருத்துவப் பட்டமேற்படிப்புகள் மற்றும் செவிலியர் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் உள்ள ரத்தவங்கி மிகவும் பிரபலமானது. தாலசீமியாநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக மாதத்துக்கு 300 யூனிட் ரத்தம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதேபோல், மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் கொண்ட ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிறக்கும் குழந்தைகளின் காலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம்எடுத்து, ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையை வெளியில் செய்ய ரூ.4 ஆயிரம் வரை ஆகும்.

குறைவான கட்டணத்தில் 150-க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கண் பிரச்சினைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் செலவாகும் சிகிச்சைகள், விஎச்எஸ் மருத்துவமனையில் ரூ.2 லட்சத்தில் அளிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் ரூ.10.5 கோடியில் மதிப்பில் 22 ஆயிரம் சதுர அடியில் இதயஅறுவை சிகிச்சை துறை தொடங்கப்படவுள்ளது. இதற்காக, நன்கொடை பெறும்பணி நடைபெறுகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன்வசதியும் வரவுள்ளது. குழந்தையின்மைக்கான சிகிச்சை மையத்தை தொடங்க இருக்கிறோம். லாப நோக்கம் இன்றிசெயல்படும் விஎச்எஸ் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு உதவி செய்ய நினைப்பவர்கள், நன்கொடை அளிப்பது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள 044-22542971, 044-22542975, 9884730000 ஆகிய எண்கள் இருக்கின்றன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நேர்காணலின்போது மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி மருத்துவர் எச்.யுவராஜ் குப்தா, கண் சிகிச்சை நிபுணர் எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

மூளை, தண்டுவட அறுவை சிகிச்சை

இந்தியாவின் சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான பி.ராமமூர்த்தி, 1978-ம் ஆண்டு மூளை அறுவை சிகிச்சையை இங்கு தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே மிகவும் குறைந்த செலவில் மூளை அறுவை சிகிச்சை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை சிறந்த முறையில் செய்யப்படுகிறது. இங்கு பட்டமேற்படிப்பு படித்து, பயிற்சி பெற்ற 50-க்கும் மேற்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர்.