கண்டாச்சிபுரம் அருகே, அரசு பேருந்து நிறுத்தப்படாததை கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரம் அருகே உள்ள மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட மாணவர்கள், கண்டாச்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்படித்து வருகின்றனர். இம்மாணவர்கள் பள்ளி செல்ல, திருவண் ணாமலை- விழுப்புரம் அரசுப்பேருந்து களில் பயணம் செய்ய இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு செல்வதற்காக புதன்கிழமை காலை மேல்வாலை பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல், சற்று தள்ளி பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீஸார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. அதன் பிறகு மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘‘பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் பேருந்தை ஓட்டிச் சென்ற சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாது” என அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜசேகர் உறுதி அளித்தார்.
அதன் பின்னர் மாற்றுபேருந்து மூலம் மாணவர்கள் பள் ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மாணவர்களின் மறியல் போராட்டத் தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.