தமிழகத்தில் 6-ம் வகுப்பு தொடங்கி அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் ஜன.3-ம் தேதி முதல் சுழற்சி முறையின்றி வழக்கம் போல இயங்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் டிச.31, ஜன.1-ம் தேதிகளில் புத்தாண்டை முன்னிட்டு கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், வரும்15-ம் தேதி (நாளை) வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸை கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின்தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய உள்துறை அமைச்சக அறிவிப்பின்படி, நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் வரும் டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் டிச.31 வரை நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள்கூடும் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், டிச.31, ஜன.1 ஆகிய 2 நாட்களிலும் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்களுக்கு அனுமதி இல்லை.

அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்துக்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

தமிழகத்தில் ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததால் மாணவர்கள் இடையே கற்றல் திறன்குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, ஜன.3-ம் தேதி முதல்அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அதாவது 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்.

கரோனா தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தற்போது அண்டை மாநிலங்களில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து, பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

657 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் நேற்று ஆண்கள்382, பெண்கள் 275 என 657 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று மட்டும் 702 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 7,666பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.