மதுபான விற்பனை உரிம நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை செய்யும் கிளப்புகள், ஹோட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சுரேஷ் பாபு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழ்நாடு மதுபான விற்பனை உரிம விதிகளின்படி, மது விற்கும் உரிமம் பெற்ற கிளப்புகள், ஹோட்டல்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பல கிளப்புகள், ஹோட்டல்களில் மதுபானங்கள் வழங்கப்படுகிறது. உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் கிளப்புகளில் மதுபானங்கள் வழங்கப்படுகிறது. கிளப்புகள், ஹோட்டல்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அதிகாலை 3 மணி வரைக்கும் மதுபானங்கள் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உரிமம் பெற்றுள்ள இந்த கிளப்புகள், ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தி, விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.