புதுடெல்லி: பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலிக்கை விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய விவகாரத்தில் உயரதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத ஹூரியத் மாநாடு அமைப்பின் முன்னணி தலைவரான யாசின் மாலிக், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மிக முக்கியமான பிரிவினைவாத தலைவர் என்பதால் உரிய பாதுகாப்புடன் திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு கருதி, அவரை சிறையைவிட்டு வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காணொலி வாயிலாக மட்டுமே அவரை வழக்கு விசாரணையில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவை மீறி யாசின் மாலிக் நேற்று (ஜூலை 21) உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். யாசின் மாலிக் ஆஜரானதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது தொடர்பாக உடனடியாக உள்துறை அமைச்சக செயலர் அஜய் குமார் பல்லாவை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இது மிகப் பெரிய பாதுகாப்பு விதி மீறல் என்பதால் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட திகார் சிறையின் இயக்குநர் சஞ்சய் பனிவால், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் 4 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.