தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சட்டப் படிப்புகளில் சேர இன்று (4-ம் தேதி) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ. எல்எல்பி, பிபிஏ. எல்எல்பி, பிகாம். எல்எல்பி, பிசிஏ. எல்எல்பி ஆகிய 5 ஆண்டு இளங்கலை ஆனர்ஸ் சட்டப் படிப்புகளும், அதேபோல், அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2021-22) சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணியைச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலமாக இன்று (ஆகஸ்ட் 4-ம் தேதி) முதல் 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, கல்விக் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.