மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள போக்துய் கிராமத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து துணைத் தலைவர் பாது ஷேக் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் கிராமத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் எரித்து கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பிர்பும் வந்த சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். இந்த வழக்கில் 21 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் திரிணமூல் ஒன்றியத் தலைவர் அனாருல் ஹுசை னிடமும் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட திரிணமூல் ஒன்றியத் தலைவர் அனாருல் ஹுசைன் கைது செய்யப் படுவார் என்றும் முதல்வர் மம்தா உறுதி அளித்துள்ளார். தற்போது, சிபிஐ அதிகாரிகள் ராம்புராஹத் அரசு விருந்தினர் இல்லத்தில் தற்காலிக முகாம் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.