இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களை கவுரவிக்கிறது பிசிசிஐ.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2021 சீசன் ரன்னர்-அப் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான போட்டியுடன் ஐபிஎல் திருவிழா ஆரம்பம் ஆகிறது. கடந்த காலங்களில் தொடக்க விழா வைத்து ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படும். இந்த விழாக்களில் முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என விழா களைகட்டும். தொடக்க விழாவுக்காக மட்டுமே பிசிசிஐ ரூ.40 முதல் 45 கோடிக்கு மேல் செலவு செய்த வரலாறுகள் உண்டு.
ஆனால், 2019-ல் புல்வாமா படுகொலை காரணமாக தொடக்க விழாவை ரத்து செய்தது பிசிசிஐ. அதற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக தொடக்க விழாக்கள் நடத்தப்படவில்லை. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் தொடக்க விழா கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்ட உள்ளது. நீரஜ் சோப்ரா தவிர பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா மற்றும் லோவ்லினா போர்கோஹைன் ஆகியோருக்கும் பிசிசிஐ பாராட்டு தெரிவிக்கவுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இவர்கள் பங்குபெறுவதுடன், இந்த விழாவில் நீரஜ் சோப்ரா பிசிசிஐ-யிடமிருந்து ரூ.1 கோடி பரிசு பெறவுள்ளார். தங்கப் பதக்கம் வென்றபோது பிசிசிஐ அவருக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. அதன்படி இன்றைய விழாவில் அவரை கவுரவப்படுத்தி அதை வழங்கவுள்ளது. இதேபோல் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியின் வீரர்களும் இன்றைய ஐபிஎல் விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.
விழா முடிந்த பின் வான்கடேயில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் போட்டிகளை அவர்கள் காண உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.