இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளரான முகமது அலி மற்றும் சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமதும் இடம் பெற்றுள்ளனர். இந்த புதுமுக பந்து வீச்சாளர்கள் இருவரும் இங்கிலாந்து அணியை அச்சுறுத்துவார்கள் என தெரிகிறது. இவர்கள் இருவரும் கடந்து வந்த பாதை…

முகமது அலி: இவரை முன்னாள் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் அப்துல் காதிர், ஜராய் தராகியாட்டி வங்கி அணிக்காக விளையாட கடந்த 2018 வாக்கில் முதன்முதலில் தேர்வு செய்தார். அதாவது சியால்கோட் கிரிக்கெட் வட்டாரத்திலிருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது அலியை தேர்வு செய்யச் சொல்லி பரிந்துரைகள் வந்த வண்ணம் இருந்தன. அமீர் வாசிம் கிரிக்கெட் அகாடமியில் இவர் பயிற்சி பெற்றதால் அவர்களின் பரிந்துரையும் கூடுதல் வலு சேர்த்தது. அப்போது அவருக்கு 26 வயது தான். ஆனால் தனது பந்து வீச்சு திறன் மூலம் ஆட்டத்தில் உடனடியாக தாக்கம் செலுத்தும் வல்லமை கொண்டவர். அதை அந்த வாய்ப்பில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

பிசிபி பேட்ரன் ட்ராபியில் இவரும், இப்போதைய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவும் சேர்ந்து விளையாடி உள்ளனர். முகமது அலியின் பந்து வீச்சு ஸ்டைல், பார்க்க அச்சு அசலாக முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பியை போல இருக்கும். துல்லியமாக வீசக்கூடியவர். பந்தின் தையலை பிட்ச் செய்து பந்தை மேலே எகிறச் செய்யும் விதமாக வீசுவார். நாள் ஒன்றுக்கு 25 ஓவர் வரை வீசும் ஆற்றல் கொண்டவர்.

தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் சென்ட்ரல் பஞ்சாப் அணிக்கு விளையாடி வருகிறார். இவர் 22 முதல்தர கிரிக்கெட்டில் ஆடி 85 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். என்ன… 4 ஆண்டுகளில் இவ்வளவுதானா என்று கேட்கலாம், பாகிஸ்தானின் செத்த ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களின் மயானம் என்பது புரிந்தால் 22 போட்டிகளில் 85 விக்கெட்டுகள் என்பது பெரிய விஷயம் என புரியவரும்.

ராவல் பிண்டி ஆடுகளத்தில் இவர் 11 இன்னிங்ஸில் 27 விக்கெட்டுகளையும், முல்டானில் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்த இரண்டு மைதானங்களிலும் இங்கிலாந்து இப்போது டெஸ்ட்டில் விளையாட உள்ளது.

அப்ரார் அகமது: இவர் அதிகாரபூர்வமாக லெக் ஸ்பின்னர் என அறியப்பட்டாலும் கூக்ளி மற்றும் கேரம் பந்துகள் வீசும் திறன் கொண்டவர். இலங்கையின் மகீஷ் தீக்‌சனா போல் லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், கேரம் பந்துகள் என வெரைட்டியாக வீசும் மற்றொரு மிஸ்ட்ரி ஸ்பின்னர். இதனை அந்த நாட்டில் இருந்து வரும் செய்திகள் உறுதி செய்கின்றன. பந்தை இவர் கடுமையாக ஸ்பின் செய்வது கராச்சி கிரிக்கெட் ஆர்வலர்களை கவர இவர் கவனம் பெற்றுள்ளார். பாகிஸ்தானில் இருக்கும் கிரிக்கெட் மண்டலங்களில் மிகவும் பலவீனமானது கராச்சி மண்டலம்தான்.

ஆனால் அங்கிருந்து வந்த இவர் 2016-ம் ஆண்டில் 53 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்தார். ரஷீத் லத்தீப் அகாடமியில் இவரது பந்து வீச்சு பரிணாமம் அடைந்தது. கராச்சி கிங்ஸ் அணிக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்டில் இவரது பெயர் வெளி உலகிற்கு தெரியவந்தது. இயான் மோர்கனுக்கு இவர் 7 டாட் பால்களை வீசியது பேசு பொருளானது. இந்த போட்டியில் இயான் மோர்கன் 57 பந்துகளில் 80 ரன்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்ரார் அகமதுவை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவரது பந்து வீச்சை பார்த்து இலங்கை ஜாம்பவான்கள் ஜெயவர்தனே மற்றும் சங்கக்காரா அசந்து விட்டனர்.

இவரது பயிற்சியாளர் மஸ்ரூர் இவரைப்பற்றி கூறும்போது, “அனைத்து பார்மெட்டிலும் விளையாடும் திறன் கொண்ட வீரர். ஏனெனில் இவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் கலையை அறிந்தவர். பல விதமான பந்துகளை வீசி திணறடிப்பவர். இவர் பாகிஸ்தானின் முக்கிய பவுலராவது உறுதி” என சொல்லியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் இந்த டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 21 வரையில் நடைபெற உள்ளது. மொத்தம் 3 போட்டிகள் இதில் அடங்கும்.