திருச்சி அதிமுக எம்எல்ஏ மகன் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.99.73 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பேட்டைவாய்த்தலை பகுதியில் ஆர்.ராஜசேகர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (மார்ச் 24) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த எம்எல்ஏ வாகன வில்லை ஒட்டப்பட்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த காரில் உரிய ஆவணம் இன்றி ரொக்கமாக ரூ.99 லட்சத்து 73 ஆயிரத்து 500 இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், முசிறி தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.செல்வராசுவின் மகனுடைய கார் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து, ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணம் கணக்கிடப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டதால், வருமான வரித் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
வருமான வரித் துறையினர் வந்து காரில் இருந்த ஓட்டுநர் சிவக்குமார், முசிறி பகுதி அதிமுக நிர்வாகிகள் சத்யராஜ், ரவி, ஜெயசீலன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது, காரில் பணம் இருந்தது தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் பதில் அளித்தனராம்.
முசிறி தொகுதியில் மீண்டும் எம்.செல்வராசு போட்டியிடும் நிலையில், அவரது மகன் காரிலிருந்து பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.