சென்னை சென்ட்ரல் அருகே சுரங்கப் பாதை பணிகள் நடைபெற்று வருவதால், அரசு பொது

மருத்துவமனை முன்பு பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. இதனால், அரசு பொது மருத்துவமனை மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து வேறு இடத்துக்கு செல்லும் பயணிகள் அவதிப்படு கின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலுள்ள சுரங்கப் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பிராட்வேயில் இருந்து கிண்டி, போரூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மன்றோ சிலை, தீவுத்திடல்வழியாக மாற்றி விடப்படுகின்றன. இந்த வழித்தட பேருந்துகள் அரசு பொது மருத்துவமனை வழியாக செல்வதில்லை.

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சென்ட்ரலில் இருந்து அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வழியாக பிற இடங்களுக்குச் செல்லும் பயணிகள் மாநகர பேருந்துகளைப் பிடிக்க சுமார் ஒரு கி.மீ தூரம் நடக்க வேண்டியுள்ளது. இதனால், மூத்த குடிமக்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

1 கி.மீ. தூரம்

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “பிராட்வேயில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாகச் செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் அரசு பொதுமருத்துவமனை நிறுத்ததுக்கு முன்பு வராததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். சென்ட்ரலில் இருந்து தாம்பரம் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் இங்குள்ள சிக்னலை தாண்டியுள்ள பேருந்து நிலையத் துக்கு செல்ல வேண்டியுள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த வழியாக மீண்டும் பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்ட்ரல் சுரங்கப் பாதையை சீரமைக்கும் பணிகளும், அந்த பாலத்தின் ஒரு பகுதியில் பராமரிப்பு பணிகளும் நடைபெறுகின்றன. எனவே, அந்த வழியாக பேருந்துகளை இயக்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகள் முடிந்தவுடன், வழக்கம் போல் மாநகர பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.