சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 2.5 கி.மீ. நடந்து செல்லும் நிலை உள்ளது.

காரைக்குடி அருகே பெரியகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆவத்தான் குடியிருப்பு, கருத்தாண்டி குடியிருப்பு, காந்தி நகர், வேளா குடியிருப்பு, பழங்குடியிருப்பு, வடக்கிவளவு, வளையவளவு, கோனார் குடியிருப்பு, சோழன் குடியிருப்பு, மண்குண்டுகரை, பட்டிராமன்கொல்லை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

மேலும், பெரியகோட்டையில் ஏராளமானோர் குடிசைத் தொழிலாகப் பூ கட்டும் தொழிலைச் செய்து வருகின்றனர். அவர்கள் காலையில் மதுரையில் பூக்களை வாங்கி வந்து, அவற்றைக் கட்டி காரைக்குடி, புதுவயல், கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.

அதேபோல், இப்பகுதிகளில் கத்தரி, வெண்டை போன்ற தோட்டக்கலைப் பயிர்களும் அதிக அளவில் விளைகின்றன. அவற்றை விவசாயிகள் காரைக்குடி, புதுவயல், கோட்டையூர் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் அடிக்கடி வெளியூர் சென்று வருகின்றனர்.

ஆனால், பெரியகோட்டைக்கு காலை, மாலை என 2 வேளை மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் 2.5 கி.மீ. நடந்து சென்று ஏம்பல் சாலையில் பேருந்து ஏறிச் செல்கின்றனர். இதையடுத்து, பெரியகோட்டைக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, பெரியகோட்டையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கூறுகையில், “சுற்றிலும் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரியகோட்டைக்கு வந்துதான் வெளியூர் செல்ல வேண்டும். காலையில் இருந்து மாலை வரை தினமும் ஏராளமானோர் வியாபாரம், வேலைக்காக இப்பகுதியில் இருந்து வெளியூர் சென்று வருகின்றனர்.

மேலும், எங்கள் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும் ஏம்பல் சாலையில் இறங்கிதான் நடந்து வர வேண்டியுள்ளது. இதனால் எங்கள் பகுதிக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்” என்று கூறினார்.