சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட போர் நிறுத்த விதிமீறல்கள் நடத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறும்போது, “ சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சிரிய அரசுப் படைகள் 35 முறையும், துருக்கி படைகள் 13 முறையும் போர் நிறுத்த விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளன. இதில் அலெப்பு மற்றும் இட்லிப் பகுதிகளில் அதிகப்படியான விதிமீறல்கள் அரங்கேறி வருகிறது.” என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சிரியாவின் இஸ்சர் மாகாணத்தில் இரு தரப்பு தாக்குதல் அதிகரித்து வருவாதல் அங்கு உயிரிழப்பும் அதிகம் ஏற்படுகிறது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.